வீட்டின் அருகே தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 வயது குழந்தை பரிதாப பலி
குன்றத்துார்: வீட்டின் அருகே தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 வயது குழந்தை இறந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்துார் அடுத்த மாங்காடு நகராட்சி ஜனனி நகர் பகுதியைச் சேர்ந்த சந்திப்குமார். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களது 2 வயது பெண் குழந்தை பிரணிகா ஸ்ரீ. வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த குழந்தை, நேற்று முன்தினம் மாலை திடீரென மாயமானது. பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியபோது, வீட்டின் அருகே காலி நிலத்தில் குட்டை போல் தேங்கிய மழைநீரில், குழந்தை மயங்கி கிடப்பதை கண்டு உறைந்து போயினர். குழந்தையை மீட்டு, பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் குழந்தை இறந்தது தெரிய வந்தது. இது குறித்து மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது. குழந்தை 'சீரியஸ்' தேனாம்பேட்டை ஜோகி தோட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மனைவி சந்தான லட்சுமி. இவர்களுக்கு தனுஷ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் சந்தான லட்சுமி, பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் அலமேலு என்பவருக்கு உடல் நிலை சரியில்லாததால், அவரை பார்க்க குழந்தையுடன் சென்றுஉள்ளார். அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தை, திடீரென காணாமல் போனது. வீடு முழுதும் தேடி விட்டு, குளியல் அறையில் பார்த்தபோது, அங்கு பக்கெட்டில் இருந்த தண்ணீரில், குழந்தை தலைக்குப்புற விழுந்து மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே குழந்தையை மீட்டு, தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.