ஸ்ரீபெரும்புதுாரில் ரூ.12 கோடியில் 25 அரசு கட்டடங்கள் திறப்பு
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில், பல்வேறு திட்டத்தின் கீழ், 12.04 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 25 அரசு கட்டடங்கள் கட்டப்பட்டன.இதனை, சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் நேற்று திறந்து வைத்தார். அங்கன்வாடி மையம், துணை சுகாதார நிலையம், சுயஉதவிக் குழு கட்டடம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஊராட்சி அலுவலகம், நியாய விலை கடை உள்ளிட்ட கட்டடங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 784 கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணையினை வழங்கினார்.இதில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.