உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய மாற்றத்தால் அரசு பஸ்களில் தினசரி பயணியர் 30,000 குறைவு

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய மாற்றத்தால் அரசு பஸ்களில் தினசரி பயணியர் 30,000 குறைவு

சென்னை, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பின், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் அரசு பேருந்துகளில் தினசரி பயணியர் எண்ணிக்கை 30,000 பேர் வரை குறைந்துள்ளது.சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கோயம்பேடில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, 2002ல் திறக்கப்பட்டது.ஒரே நேரத்தில் 250 பேருந்துகளையும், ஒரு நாளைக்கு 2,200க்கும் மேற்பட்ட பேருந்துகளையும் இங்கிருந்து இயக்க முடியும். பிராட்வேயில் இருந்து கோயம்பேடுக்கு பேருந்து நிலையம் மாற்றும்போது, பயணியர் பெரியளவில் அதிருப்தியடையவில்லை.இந்நிலையில், பல்வேறு அடிப்படை வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளும், ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.மற்ற போக்குவரத்து கழக பேருந்துகளும், இந்த மாதம் இறுதிக்குள் இங்கிருந்து இயக்கப்படும் என, போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.கிளாம்பாக்கம் நிலையம் திறந்ததில் இருந்தே, இணைப்பு பேருந்து வசதி இல்லை என, பயணியர் புகார் தெரிவித்து வருகின்றனர். பயணியரின் புகாருக்கு, தீர்வு காணும் வகையில், போக்குவரத்து கழகங்களும், சி.எம்.டி.ஏ.,வும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.பயணியர் சிலர் கூறியதாவது:கோயம்பேடு பேருந்து நிலையத்தில், அதிகளவில் மாநகர பேருந்து வசதி, மெட்ரோ ரயில் வசதி இருப்பதால், மக்கள் பயணம் செய்ய வசதியாக இருந்தது.கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறந்ததில் இருந்து, பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. இதனால், பயணியர் மத்தியில், இந்நிலையத்தை பயன்படுத்துவதில் தயக்கம் ஏற்படுகிறது.சீரான இணைப்பு பேருந்து வசதி இல்லை. வடசென்னைக்கு செல்ல வேண்டுமென்றால் 55 கி.மீ., துாரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே, கிளாம்பாக்கத்தில் மின்சார ரயில் சேவை மற்றும் மெட்ரோ சேவையை விரைந்து கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதுவரை, 50 சதவீத பேருந்துகளை கோயம்பேடில் இருந்து இயக்கினால், பயணியர் வீண் அலைச்சலை தவிர்க்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் கோயம்பேடில் இருந்து வெளியூருக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளில், சராசரியாக 1.45 லட்சம் பேர் பயணம் செய்வர். ஆனால், கிளாம்பாக்கத்திற்கு புதிய பேருந்து நிலையம் மாற்றத்திற்கு பின், இந்த பயணியர் எண்ணிக்கை 1.15 லட்சமாக குறைந்துள்ளது.ஒவ்வொரு முறையும், பேருந்து நிலையம் மாற்றத்தின்போது இந்த மாற்றம் இருக்கும். தற்காலிகமாக ரயில்களிலும், சொந்த வாகனங்களிலும் பயணத்திற்கு மாறி உள்ளனர். இது, அடுத்த சில மாதங்களில் மாறி விடும்.பயணியர் புகாரின் அடிப்படையில், பல்வேறு வசதிகளை கொண்டுவர போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ