உத்திரமேரூரில் 40 ஏரிகள் நிரம்பின 166 ஏரிகளில் 70 சதவீதம் நீர் இருப்பு
உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏரிகள் நிறைந்த ஒன்றியமாக உத்திரமேரூர் விளங்குகிறது. உத்திரமேரூர் ஒன்றியத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ், 92 ஏரிகளும், ஒன்றிய கட்டுப்பாட்டில் 130 ஏரிகள் என, மொத்தம் 222 ஏரிகள் உள்ளன.கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பெய்த தென் மேற்கு பருவ மழைக்கு, இப்பகுதி ஏரிகளில் குறிப்பிட்ட அளவிலான தண்ணீர் சேகரமானது.இதனால், வடகிழக்கு பருவ மழைக்கு விரைவாக ஏரிகள் நிரம்பும் என, இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். எனினும், வடகிழக்கு பருவமழை துவங்கி, இரண்டு மாதங்களாக ஏரிகளில் குறைவான தண்ணீரே சேகரமானது. இந்நிலையில், கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக, ஏரிகளுக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 92 ஏரிகளில், 24 ஏரிகள் முழுமையாக நிரம்பி கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறி வருகிறது.அதேபோல, ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள 130 ஏரிகளில், அகரம்துாளி, குருவாடி, அரசாணிமங்கலம் உள்ளிட்ட 16 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன.மேலும், 114 ஏரிகளில், 70 சதவீதம் நீர் இருப்பு உள்ளதாகவும், 16 ஏரிகளில், 70 சதவீதத்திற்கு குறைவான அளவிலான நீர் இருப்பு உள்ளதாகவும், உத்திரமேரூர் பி.டி.ஓ., பத்மாவதி கூறியுள்ளார். உத்திரமேரூர் நீர்வளத்துறை உதவி பொறியாளர் கண்ணன் கூறியதாவது:பருவ மழைக்கு முன்னதாகவே, ஏற்கனவே கணிசமான அளவிற்கு நீர் இருப்பு இருந்த உத்திரமேரூர், சாலவாக்கம், திருப்புலிவனம், அழிசூர், சாலவாக்கம், அனுமந்தண்டலம் உள்ளிட்ட 24 ஏரிகள் விரைவாக நிரம்பி உள்ளன. மீதமுள்ள ஏரிகள் அனைத்தும், 70 சதவீதம் அளவிற்கான கொள்ளளவை எட்டி உள்ளன. ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்வதால், அடுத்த சில நாட்களில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.