உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 3 ஆண்டில் 526 டன் ரேஷன் அரிசி பறிமுதல் கிலோ ரூ.4 க்கு விற்பதால் தரகர்கள் குஷி

3 ஆண்டில் 526 டன் ரேஷன் அரிசி பறிமுதல் கிலோ ரூ.4 க்கு விற்பதால் தரகர்கள் குஷி

காஞ்சிபுரம்:தமிழகத்தில் ரேஷன் உணவுப்பொருள் கடத்தல் சம்பவங்கள், உணவு பொருள் வழங்கல் துறையினருக்கும், உணவு கடத்தல் குற்றபுலனாய்வு பிரிவு போலீசாருக்கும் சவாலாக உள்ளது. ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கும் நிலையில், உணவு பொருட்கள் டன் கணக்கில் கடத்தப்படும் சம்பவங்கள் குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்துகிறது.அரிசி, பருப்பு போன்ற உணவு பொருள் கடத்தல் தொடர்பாக, 9,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக, உணவு வழங்கல் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த 2021 ல் இருந்து தற்போது வரையிலான மூன்றரை ஆண்டுகளில் மட்டும், 526 டன் ரேஷன் அரிசியை, குடிமை பொருள் அதிகாரிகள் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மாவட்டம் முழுதும், இதுவரை 740 சோதனைகள் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒலிமுகமதுபேட்டை, சிறுகாவேரிப்பாக்கம், திம்மசமுத்திரம், அய்யம்பேட்டை, வாலாஜாபாத், ஓரிக்கை, சுங்குவார்சத்திரம் போன்ற பகுதிகளில் ரேஷன் அரிசியை பதுக்குவது, கடத்துவது போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.ரேஷன் அரிசியை இடைத்தர்களிடம், கிலோ 4 அல்லது 5 ரூபாய்க்கு பொதுமக்கள் விற்பனை செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தாலும், ரேஷன் கடை ஊழியர்களும், உணவு பொருட்கள் கடத்தலுக்கு துணைபோவது தொடர்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், உணவு பொருட்கள் கடத்தல், முறைகேடு போன்ற காரணங்களுக்காக, 15 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், 7 பேர் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 5 பேர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர். பறிமுதல், கைது, வழக்குப்பதிவு என, அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், ரேஷன் அரிசி கடத்தல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வாக உள்ளது.இதுதொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது :உணவு பொருள் கடத்தல் குறைவதற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் தேவைப்படுகிறது. ரேஷன் அரிசியை, அரசு 30 ரூபாய்க்கு மேலாக பணம் கொடுத்து வாங்கி இலவசமாக வழங்குகிறது. அரிசி வாங்க விருப்பமில்லை என்றால், அரிசி வேண்டாம் என்ற விருப்பத்தை ஆன்லைன் வாயிலாகவே தெரிவிக்கலாம். அதைவிடுத்து, ரேஷன் அரிசியை கடைகளில் வாங்கி, அதை கடத்தலுக்காக விற்பனை செய்யக்கூடாது. விற்பனை செய்யும் பொதுமக்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2016 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பி.ஓ.எஸ்., இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, ரேஷன் கடை ஊழியர்கள் பலரும் முறைகேடு செய்ய முடியாமல் கடிவாளம் போட்டது. கள்ளசந்தை தடுப்பு காவல் சட்டம் மேலும் கடுமையாக மாற்றப்பட வேண்டும். ஆறு மாதங்கள் சிறை தண்டனை என்பதை, ஒரு ஆண்டாக மாற்ற வேண்டும் என்ற கருத்துருவை, மாவட்ட கலெக்டர் வாயிலாக, அரசுக்கு எழுதியுள்ளோம். உணவுத்துறையில் கடத்தலை தடுக்க சட்டம் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும். எங்களுக்கு தகவல் வந்தவுடன் நடவடிக்கை எடுக்கிறோம். அரிசி கடத்தல் தொடர்பாக, சம்பந்தப்பட்ட உணவு வழங்கல் துறை அதிகாரிகளுக்கு போன் செய்தாலே நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

311 சிலிண்டர்கள் பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும், வணிக ரீதியில் வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்தியதாக, 311 சிலிண்டர்களும், 526 டன் ரேஷன் அரிசியும், 270 லிட்டர் மண்ணெண்ணெய்யும், 355 கிலோ பருப்பும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு, 31 லட்ச ரூபாய் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடத்தல் தொடர்பாக, 585 வழக்குகள், 600 க்கும் மேற்பட்டோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. 96 வாகனங்கள் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 3 பேர் மீது கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ஜாமின் பெற முடியாத வகையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி