மக்கள் நீதிமன்றத்தில் 569 வழக்குகளுக்கு தீர்வு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில், நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 569 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தீப்தி அறிவுநிதி வழிகாட்டுதலின்படி, தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சியை, தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா தலைமையில், வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியுமான அருண்சபாபதி நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனாம்பாள், கூடுதல் சார்பு நீதிபதி திருமால், மாவட்ட உரிமையியல் நீதிபதி சந்தியாதேவி, நீதித்துறை நடுவர்கள், இனியா, நவீன்துரைபாபு, வழக்கறிஞர்கள், பொதுமக்கள் இதில் பங்கேற்றனர். இதில், மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, வங்கி வாராக்கடன், குடும்ப நலம், தொழிலாளர் நல வழக்குகள் என மொத்தம் 577 வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டு, இழப்பீட்டு தொகையாக 10.99 கோடி ரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில், 65 வங்கி வழக்குகளுக்கு 49.58 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.