திருமுக்கூடலில் கொள்முதல் செய்த 6,000 நெல் மூட்டைகள் தேக்கம்
திருமுக்கூடல்: திருமுக்கூடல் கொள்முதல் நிலையத்தில் தயாராக உள்ள 6,000 நெல் மூட்டைகள் லாரிகள் வாயிலாக ஏற்றி செல்லாததால் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் சுற்றுவட்டார கிராமங்களில் சொர்ணவாரி பட்டத்திற்கு சாகுபடி செய்த நெல் பயிர்களை இரண்டு மாதங்களாக விவசாயிகள் அறுவடை செய்து திருமுக்கூடல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் விவசாயிகள் கொள்முதல் செய்த நெல்லை, நுகர்பொருள் வாணிப கழக நெல் சேமிப்பு கிடங்கு மற்றும் அரிசி ஆலைகளுக்கு ஏற்றிச் செல்ல 10 நாட்களுக்கு மேலாக லாரிகள் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், தற்போது 90 கிலோ கொண்ட 6,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்து நிலையத்திலேயே தேக்கம் அடைந்துள்ளது. தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருகிறது. எனவே, இப்பகுதி கொள்முதல் நிலையத்தில் தேக்கமான நெல் மூட்டைகளை உடனடியாக ஏற்றிச் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து, நுகர்பொருள் வாணிப கழக அலுவலர் ஒருவர் கூறியதாவது: நெல் சேமிப்பு கிடங்குகளில் இடம் பற்றாக்குறை, லாரிகள் தட்டுபாடு மற்றும் மழைக்காலம் போன்ற இடர்பாடுகளால் காலதாமதம் ஏற்படுகிறது. திருமுக்கூடல் நிலையத்தில் கொள்முதல் செய்துள்ள அனைத்து நெல் மூட்டைகளும் விரைவாக ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.