உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வீட்டு வரி செலுத்த வருவோரிடம் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு

வீட்டு வரி செலுத்த வருவோரிடம் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு

குன்றத்துார்:குன்றத்துார் ஒன்றியத்தில் உள்ள பல ஊராட்சிகளில், வீட்டு வரி செலுத்த வருவோரிடம் அதிக அளவு லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை புறநகரில் குன்றத்துார் ஒன்றியம் அமைந்துள்ளது. இங்கு, 42 ஊராட்சிகள் அமைந்துள்ளன.இங்கு புதிதாக வீடு கட்டுவோர், வணிக கட்டடங்கள் கட்டுவோர், வீட்டு வரி செலுத்த, அந்தந்த ஊராட்சி அலுவலகத்தை அணுகுகின்றனர். ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள், வீட்டு வரிக்கு ரசீது வழங்கி, அவற்றை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய, 5,000 முதல் 50,000 ரூபாய் வரை, கட்டடங்களுக்கு ஏற்ப லஞ்சம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று, வீட்டு வரியை ஒரு முறை செலுத்தி ஆன்லைனில் பதிவேற்றம் செய்துவிட்டால், அடுத்த முறை ஆன் லைனில் நாமே வீட்டு வரியை செலுத்தி விடலாம். இதனால், முதல் முறை வீட்டு வரியை செலுத்த சென்றால், ஊராட்சி தலைவர்கள் வீட்டு வரியை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய, அதிக அளவில் லஞ்சம் கேட்கின்றனர். வெளியூரில் இருந்து வந்து, கிராம பகுதிகளில் இடம் வாங்கி வீடு கட்டியவர்கள், தலைவர்கள் குறித்து புகார் அளிக்க அச்சமடைகின்றனர். குன்றத்துார் ஒன்றியத்தில் படப்பை, சாலமங்கலம், செரப்பணஞ்சேரி உள்ளிட்ட பல ஊராட்சிகளில், இந்த பிரச்னை உள்ளது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி