உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்றால் நடவடிக்கை: ஆர்.டி.ஓ.,

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்றால் நடவடிக்கை: ஆர்.டி.ஓ.,

உத்திரமேரூர்:ஆட்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார். உத்திரமேரூரை சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் காதணி விழா, திருமணம், கோவில் திருவிழா, துக்க நிகழ்வு உள்ளிட்டவற்றிற்காக, சரக்கு வாகனங்களில் வெளியூர்களுக்கு பயணித்து வருகின்றனர். அதேபோல, கட்டட வேலை, கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் சரக்கு வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக் கொண்டு, வேகமாக செல்வதால் சரக்கு வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறது. சில நேரங்களில் விபத்தில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. ஆட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்கள் மீது, போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்காததால், இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, ஆட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்கள் மீது, வட்டார போக்குவரத்து துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வட்டார போக்குவரத்து துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'ஆட்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி செல்லக்கூடாது என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் விதிமுறைகளை மீறி சிலர், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்கின்றனர். அவ்வாறு ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி