4,455 ஏக்கருக்கு இழப்பீடு வழங்க வேளாண் துறையினர் தீவிரம்
காஞ்சிபுரம், டிச. 24-காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களின் கட்டுப்பாட்டில், 1.50 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இதில், சம்பா பருவத்தில், 37,050 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்வதற்கு, வேளாண் துறை இலக்கு நிர்ணயம் செய்து, 32,110 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. அதேபோல், நவரை பருவத்திற்கு, 46,930 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, 15,000 ஏக்கர் சாகுபடி செய்யும் பணி நடந்து வருகிறது.இருப்பினும், பெஞ்சல் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும், 18 வீடுகள் சேதம், 12 கால் நடைகள் இறப்பு, 4,455 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. தொடர்ந்து, 35 மரங்கள் சேதம் என, கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. பெஞ்சல் புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு, தலா 10,000 ரூபாய், பாசன பயிர்களுக்கு 1 ஏக்கருக்கு, 6,800 ரூபாய் என, தனித் தனியாக தரம் பிரித்து இழப்பீடு வழங்கப்பட உள்ளது.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, 2.97 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேளாண் துறை முடிவு செய்துள்ளது. விரைவில், அவரவர் வங்கி கணக்கிற்கு இழப்பீடு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் துறை அதிகாரி கூறுகையில்,'காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து, வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையினர் கணக்கெடுத்து உள்ளனர். பாதிக்கப்பட்ட வருவாய் கிராமங்களுக்கு ஏற்ப, பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கைஎடுக்கப்படும்' என்றார்.