அரசு சுகாதார மையங்களில் மருத்துவர்கள் மீது...குற்றச்சாட்டு: பணியில் இல்லாததால் நோயாளிகள் பரிதவிப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற
நல்வாழ்வு மையங்களில், பகலில் மருத்துவர்கள் இருப்பதில்லை என, நோயாளிகள்
குற்றம் சுமத்துகின்றனர்.காஞ்சிபுரம்
மாநகராட்சியில் 2.5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களின் மருத்துவ
தேவைக்காக, ஐந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. 50,000
பேருக்கு ஒரு நகர் நல்வாழ்வு மையங்கள் இருக்க வேண்டும். அந்த வகையில், தலா
25 லட்சம் ரூபாய் மதிப்பில், ஐந்து நகர் நல்வாழ்வு மையங்கள் கட்டி
முடித்து, 2023ல் திறக்கப்பட்டன.மேற்கண்ட 10 மையங்களில்
கர்ப்பிணியருக்கு பரிசோதனை, பிரசவம் பார்க்கப்படுகிறது. தவிர பொது
மருத்துவம், நாய்கடி, தேள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் தீண்டினால்
அதற்குரிய சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு சிக்கல்
இதற்காக
மருத்துவம் மற்றும் சுகாதார துறை, தற்காலிக மருத்துவர்களை நியமித்து,
புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில்,
இம்மருத்துவர்கள் முறையாக வருவதில்லை என புகார் எழுந்துள்ளது.நேற்று,
கைலாசநாதர் கோவில் அருகே, தனியார் கட்டுமான பணியில், தொழிலாளர்கள்
ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒருவரை கருந்தேள் கடித்தது. இதற்கு சிகிச்சை
பெற, அருகில் உள்ள உப்பேரிகுளம் நகர்நல மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு,
மருத்துவர், செவிலியர்கள் பணியில் இல்லாததோடு, பூட்டி வைக்கப்பட்டிருந்தது.இதனால் அவர், அப்பகுதி தனியார் மருத்துவமனையில் விஷ முறிவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இதேபோல,
மாநகராட்சியில் உள்ள மற்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நல்வாழ்வு
மையங்களில், தற்காலிக மருத்துவர்கள் பணியில்லாததால், கர்ப்பிணியர்
சிகிச்சை, விஷக்கடிக்கு சிகிச்சை பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.இதுகுறித்து, காஞ்சிபுரம் நகர மக்கள் கூறியதாவது:அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில், பகல் நேரங்களில் மருத்துவர்கள் இருப்பதில்லை. சிறப்பு முகாம்
இதனால், பல்வேறு சிகிச்சைக்காக வரும் ஒவ்வொரு முறையும், மருத்துவர்கள் இல்லாததால், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியதாகிறது.நகரில் வசிக்கும் மக்களின் சுகாதாரம் காக்கவும், நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநகராட்சி சார்பில், மருத்துவ உட்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.ஆனால், இருக்கும் கட்டமைப்பில் முறையாக மருத்துவ சேவை கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. மருத்துவர்கள் முழுநேரமும் பணியில் இருக்க, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் செந்தில் கூறியதாவது:சில ஆரம்ப சுகாதார நிலையங்களில், நாள் முழுதும் மருத்துவர்கள் இருப்பர். நகர் நல்வாழ்வு மையங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே மருத்துவர்கள் இருப்பர்.மருத்துவ நிகழ்ச்சிக்காக, ஏதேனும் அரசு பள்ளிகளில் சிறப்பு முகாம்களுக்கு சென்றிருப்பர். அதனால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கும். முறையாக விசாரிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.