நெல் விவசாயிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் சரிவு நிரந்தரமாக கொள்முதல் நிலையங்கள் துவங்கவில்லை என குற்றச்சாட்டு
காஞ்சிபுரம்:அரசு கொள்முதல் நிலையங்களில், நெல் விற்பனை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் சரிவடைந்து வருகிறது. நிரந்தர கொள்முதல் நிலையங்கள் துவங்கவில்லை என, விவசாயிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய தாலுகாக்களில், 1.50 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இதில், சம்பா மற்றும் நவரை ஆகிய இரு பருவங்களிலும், ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப் படுகிறது. சொர்ணவாரி பருவத்தில், தண்ணீர் பற்றாக்குறை, கோடை வெயில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 30,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். சொர்ணவாரி மற்றும் நவரை ஆகிய இரு பருவத்திற்கும், நெல் அறுவடை செய்யும் போது, நுகர்பொருள் வாணிப கழகத்தினர் நெல் கொள்முதல் நிலையங்களை துவக்குகின்றனர். இதன் வாயிலாக, கணிசமான நெல் கொள்முதல் செய்து, அரிசியாக மாற்றி கூட்டுறவு துறைக்கு கொடுத்து விடுகின்றனர். சரிவு இதில், நவரை பருவத்திற்கு சாகுபடி செய்யும் நெல்லை, கொள்முதல் செய்வதற்கு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் துவக்கி, நெல் கொள்முதல் செய்கின்றனர். குறிப்பாக, நுகர்பொருள் வாணிப கழகத்தில் மட்டுமல்லாது, தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழுவினரும், நவரை பருவத்திற்கு நெல் கொள்முதல் நிலையங்களை துவக்கி, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கின்றனர். இதில், சொர்ணவாரி பருவத்திற்கு மட்டும் நுகர்பொருள் வாணிப கழகத்தினர் நெல் கொள்முதல் செய்கின்றனர். அதன்படி, 2022- - 23ல், 23,426 விவசாயிகளிடம் இருந்து, 1.26 லட்சம் டன் நெல்லும், 2023- - 24ல், 21,906 விவசாயிகளிடம் இருந்து, 1.43 லட்சம் டன் நெல்லும், 2024- - 25ல், 18,652 விவசாயிகளிடம் இருந்து, 1.41 லட்சம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் கொள்முதல் நிலையங்களில், நெல் விற்பனை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை வேகமாக சரிந்து வருகிறது. இருப்பினும், கொள்முதல் செய்யப்படும் நெல்லின் எடை சராசரியாக இருக்கிறது என, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தனியாரிடம் விற்பனை இதுகுறித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஏ.எம்.கண்ணன் கூறியதாவது: விவசாயிகளின் சவுகரியங்களுக்கு ஏற்ப நெல் நடவு செய்கின்றனர். அறுவடை செய்யும் போது நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்குவதில்லை. நவரை, சொர்ணவாரி ஆகிய சீசன்களுக்கு ஏற்ப, நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன. சீசன் இல்லாத நேரங்களில், தனியார் நெல் வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். விவசாயிகளின் நலன் கருதி, அனைத்து காலங்களில் இயங்கும் வகையில் நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: தனியார் நெல் விற்பனை நிலையங்களை காட்டிலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் விற்பனை செய்யப்படும் நெல்லுக்கு கூடுதல் விலை கிடைக்கிறது. இதனால், விவசாயிகள் நெல் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு சில விவசாயிகள், பருவத்திற்கு முன்னதாக அறுவடை செய்த நெல்லை நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்காத நாட்களில், தனியார் நெல் வியாபாரிகளுக்கு விற்று விடுகின்றனர். இதனால், நெல் விற்பனை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை சரிவுக்கு காரணமாக உள்ளது. நிரந்தரமான நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கினால், நெல் விற்பனை செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.