உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாக்காளர்கள் சிறப்பு தீவிர திருத்த முகாம் 4 தொகுதிக்கும் விண்ணப்பங்கள் தயார்

வாக்காளர்கள் சிறப்பு தீவிர திருத்த முகாம் 4 தொகுதிக்கும் விண்ணப்பங்கள் தயார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 14.22 லட்சம் வாக்காளர்களுக்கான சிறப்பு தீவிர திருத்த முகாம் இன்று துவங்குகிறது. அதற்கான விண்ணப்பங்கள், 4 சட்டசபை தொகுதிகளுக்கும் அனுப்பப்பட்டன. தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம், தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் உள்ள, 1,401 ஓட்டுச்சாவடிகளுக்கு உட்பட்ட, வாக்காளர்கள் திருத்த முகாம், நவ.,4 முதல் டிச.,4 வரை நடைபெற உள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகளை, 1,401 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொள்ள உள்ளனர். தீவிர திருத்த முகாமிற்கான விண்ணப்ப படிவங்கள், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, 4 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று அனுப்பப்பட்டன. இன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக, ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட ஒவ்வொரு வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று, வாக்காளர்கள் பற்றிய சரிபார்ப்பு செய்ய உள்ளனர். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14.22 லட்சம் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தப்பட உள்ளது. வீடு பூட்டப்பட்டிருந்தால், வீட்டின் கதவில், விண்ணப்ப படிவம் வைத்துவிட்டு செல்ல தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. தகுதியான நபர்களை சேர்க்கவும், தகுதியற்ற நபர்களை நீக்கவும் இந்த தீவிர திருத்த முகாம் நடைபெறுவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதற்காக, நில நடைமுறைகளை தேர்தல் கமிஷன் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கும் பணிகள் முடிந்து, டிச.,9ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், ஆர்.டி.ஓ.,விடம் வாக்காளர்கள் மேல்முறையீடு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ