அங்கன்வாடி மையங்களில் 197 பணியிடங்களுக்கு ஏப்., 23க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: கலெக்டர்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்கள் எனப்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள, 107 அங்கன்வாடி பணியாளர், 11 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 79 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.மாவட்டத்தில் வட்டார வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள அங்கன்வாடி பணியிடங்கள் எண்ணிக்கை மற்றும் இன,சுழற்சி விபரம் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும், தகவல் பலகையில் ஒட்டப்படும்.விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பணிகளுக்கு ஏப்ரல் 23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படும் அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் தொடர்ந்து 12 மாத காலம் பணி முடித்த பின், சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவர்.காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே கிராமத்தைச் சேர்ந்தவராகவோ அல்லது அந்த கிராம ஊராட்சிக்குட்பட்ட பிற கிராமத்தைச் சேர்ந்தவர், அந்த கிராம ஊராட்சி எல்லையின் அருகிலுள்ள அடுத்த கிராம ஊராட்சியை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர் அறிவிக்கப்பட்டுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துகளில் அதே வார்டு அல்லது அருகிலுள்ள வார்டு அல்லது வார்டின் எல்லையை பகிர்ந்து கொள்ளும் பகுதியை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டார குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலகத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஜாதி சான்று, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண்,மற்றும் மாற்றுத்திறனாளிகள் என்றால் அதற்கான சான்றிதழ்களை இணைக்க வேண்டும்.நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.