காஞ்சியில் மின்விளக்கு பழுதால் இருளில் இயங்கும் ஏ.டி.எம்., மையம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, வேதாசலம் நகர் பேருந்து நிறுத்தம் அருகில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏ.டி.எம்., மற்றும் சி.டி.எம்., இயந்திரம் ஒரே மையத்தில் இயங்கி வருகிறது.இம்மையத்தில் இரவு நேரத்தில் வெளிச்சம் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு பழுதடைந்து ஒளிராமல் உள்ளது. இதனால், இருளில் இயங்கும் இம்மையத்தில் பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் வந்த வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர்.மேலும், ஏ.டி.எம்., இயந்திரத்தில் உள்ள ‛கீபேடில்' உள்ள எண்கள் அழிந்த நிலையில், தெளிவாக தெரியாததால், பணம் எடுக்க வந்தவர்கள், இருளில் தட்டு தடுமாறி தவறான எண்களை அழுத்தியதால் பணம் எடுப்பதில் பிரச்னை ஏற்பட்டதால், சிரமத்திற்கு ஆளாகினர்.சிலர் மொபைல் போன், டார்ச் லைட் வெளிச்சத்தில் ஏ.டி.எம்., மற்றும் சி.டி.எம்., இயந்திரத்தை பயன்படுத்தினர்.மேலும், இம்மையத்தில் உள்ள ஏசி இயந்திரமும் இயங்காததால், வாடிக்கையாளர்கள் எரிச்சல் அடைந்தனர். எனவே, பழுதடைந்த மின்விளக்கையும், ஏசி இயந்திரத்தையும் சீரமைக்க, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாடிக்கையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.