தானியங்கி மழைமானி 18 இடங்களில் தயார்: மழை காலத்தில் மக்களை மீட்க உதவும்
காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் மாவட்டத்தில் தானியங்கி மழைமானி 18 இடங்களில் பொருத்தப்பட்டு, அவை பயன்பாட்டிற்கு வந்துள்ளன. வடகிழக்கு பருவமழைக்கு, இந்த மழைமானிகள் மூலம் தகவல் அடிப்படையில் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு, மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை காக்க முடியும் என, பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.தமிழகம் முழுதும் ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும், சாதாரண மழைமானி பொருத்தப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் அதில் பதிவாகும் மழை அளவை, நேரடியாக சென்று ஊழியர் ஒருவர் குறிப்பெடுத்து வருவது வழக்கமாக இருந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய ஐந்து தாலுகா அலுவலகங்களிலும், செம்பரம்பாக்கம் ஏரி அருகே என, ஆறு இடங்களில் சாதாரன மழைமானி பொருத்தப்பட்டிருந்தது. இரும்பு டவர் ஒன்று அமைக்கப்பட்டு, அதில் மழைநீர் சேகரமாவதற்காக ஒரு கண்ணாடி குடுவை ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். அவற்றை, ஒவ்வொரு மணி நேரத்திற்கும், வருவாய் துறையைச் சேர்ந்த பணியாளர் ஒருவர், நேரடியாக சென்று, குடுவையில் நிரம்பிய மழை அளவை குறித்து, பேரிடர் மேலாண்மை அலுவலகத்திற்கு தகவல் அனுப்பி வருவார். இந்த நடைமுறையில் துல்லிய தகவல்கள் கிடைப்பதில்லை. அதேபோல், பணியாளர் ஒருவரை எப்போதும் தாலுகா அலுவலகம் எதிர்பார்த்திருக்க வேண்டும். இந்த நடைமுறைக்கு பதிலாக தான், இப்போது தானியங்கி முறையில், மழைமானி பொருத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்த மழைமானி இயந்திரங்கள் சமீபத்தில் பயன்பாடு 18 துவங்கியுள்ளன. 18 இடங்களிலும், ஆட்கள் நேரடியாக சென்று மழை அளவை குறிக்க வேண்டிய தேவை இனி இல்லை. மழைமானியுடன் எலெக்ட்ரானிக் சாதனங்கள் பொருத்தப்ட்டுள்ளன. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இந்த மழை அளவை, காஞ்சிபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகத்திற்கு, செயற்கோள் வழியாக, கணினிக்கு அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 18 தானியங்கி மழைமானி பொருத்தப்பட்டது மட்டுமல்லாமல், ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியர் அலுவலகம், வாலாஜாபாத் தாலுகா அலுவலகம், உத்திரமேரூர் வேடபாளையம் நுகர்பொருள் வாணிப கழக வளாகம் ஆகிய மூன்று இடங்களில், தானியங்கி வானிலை மையமும் அமைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது. https://x.com/dinamalarweb/status/1950000211264164231/photo/1இது குறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது: தானியங்கி மழைமானி, 18 இடங்களிலும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இந்த மழைமானி மூலம் கிடைக்கும் மழையளவு தகவல், செயற்கைகோள் வாயிலாக, கட்டுப்பாட்டு அறையில் உள்ள கணினிக்கு வந்துவிடும். மாவட்டத்தில் நிலவும் வெப்பநிலை, மழையளவு, வானிலை முன்னறிவிப்பு, காற்றின் ஈரப்பதம் உள்ளிட்ட விபரங்கள் உடனுக்குடன் கிடைக்கும். தாலுகா வாரியாக விவசாயிகளுக்கு முன்கூட்டியே மழை விபரத்தை தெரிவிக்கலாம். வானிலை பற்றி அனைத்து விபரங்களும் தானாகவே, கணினியில் பதிவாகி வருவதால், முன்னெச்சரியாக மழை, வெள்ளம், வெப்பம் பாதிக்கும் பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு செய்ய முடியும். இந்த தகவலால், மக்கள் உஷார்படுத்தப்பட்டு, மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள முடியும். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் மழையளவு பதிவாகி கொண்டிருக்கும். வரக்கூடிய வடகிழக்கு பருவமழைக்கு இந்த அமைப்பு, பேரிடர் மேலாண்மை துறைக்கு கைகொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். தானியங்கி மழைமானி அமைக்கப்பட்டுள்ள இடம் விபரம் தாலுகா இடம் காஞ்சிபுரம் சிறுகாவேரிப்பாக்கம் காஞ்சிபுரம் பரந்துார் காஞ்சிபுரம் கொட்டவாக்கம் காஞ்சிபுரம் இலுப்பம்பட்டு காஞ்சிபுரம் கிளார் ஊராட்சி அலுவலகம் வாலாஜாபாத் மாகரல் வாலாஜாபாத் தென்னேரி உத்திரமேரூர் திருப்புலிவனம் உத்திரமேரூர் வேடபாளையம் உத்திரமேரூர் திருமுக்கூடல் உத்திரமேரூர் வாடதவூர் உத்திரமேரூர் பென்னலுார் சமுதாய கூடம் ஸ்ரீபெரும்புதுார் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை ஸ்ரீபெரும்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி ஸ்ரீபெரும்புதுார் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு ஸ்ரீபெரும்புதுார் மண்ணுார் ரேஷன் கடை அருகே குன்றத்துார் சோமங்கலம், மாதிரி பள்ளி குன்றத்துார் கொளப்பாக்கம் அரசு பள்ளி