பேட்டரி வாகனங்கள் பழுது குப்பை சேகரிப்பதில் சிக்கல்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சி, 18 வார்டுகளில் 40,000 மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பேரூராட்சியில் உள்ள குடியிருப்புகள், கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து, துாய்மை பணியாளர்கள் வாயிலாக மட்கும் மற்றும் மட்கா குப்பை சேகரிக்கப்படுகின்றன.அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பை, திடக்கழிவு மேலாண்மை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, மட்கும் குப்பை இயற்கை உரமாகவும், மட்கா குப்பை மறுசுழற்சிக்கும் பயன்படுத்தப்படுகிறது.இந்நிலையில், பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையை, திடக்கழிவு மேலாண்மை கிடங்கிற்கு கொண்டு செல்ல, பல லட்சம் ரூபாயில், குப்பை சேகரிக்கும் 18 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.தற்போது, குப்பை சேகரிக்கும் இரண்டு பேட்டரி வாகனங்கள் முறையாக பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து உள்ளன. அவ்வாறு பழுதான இரண்டு பேட்டரி வாகனங்கள் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு எதிரே, பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது.மழை மற்றும் வெயிலில் நிற்க வைக்கப்பட்டுள்ள, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேட்டரி வாகனங்கள் வீணாகி வருகின்றன. பேட்டரி வாகனங்கள் பழுதடைந்து உள்ளதால், துாய்மை பணியாளர்கள் தள்ளுவண்டியை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.எனவே, பழுதடைந்த குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்களை, பழுது நீக்கி பயன்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.