நடிகர் அஜித் வீடு உட்பட ஏழு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: நடிகர் அஜித் வீடு, மக்கள் நல்வாழ்வு அமைச்சர் சுப்பிரமணியன் வீடு உட்பட ஏழு இடங்களுக்கு நேற்று, வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மயிலாப்பூரில் உள்ள தமிழக டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, நேற்று காலை இ - மெயில் ஒன்று வந்தது. அதில், திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித் வீடு, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் சுப்பிரமணியன், நடிகை ரம்யா கிருஷ்ணன் வீடு, செம்பரம் பாக்கத்தில் உள்ள இ.வி.பி., பிலிம்சிட்டி, கோவளத்தில் உள்ள தர்கா உட்பட, ஏழு இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது. உடனே, சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கும், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் வந்து தீவிர சோதனை நடத்தினர். அதில், எந்தவித வெடி பொருட்களும் கிடைக்காததால், இ - மெயில் முகவரியை வைத்து, மிரட்டல் விடுத்தவர் யார் என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.