அரசு ஆவணங்கள் பெற பழங்குடியினருக்கு முகாம்
வாலாஜாபாத்;வாலாஜாபாத் சுற்றுவட்டார பழங்குடியினர், அரசு ஆவணங்கள் பெறுவதற்கான வழிகாட்டும் பயிற்சி முகாம் வாலாஜாபாத்தில் நடந்தது. குழந்தைகள் கண்காணிப்பகம் மற்றும் காஞ்சி தொண்டு நிறுவனம் சார்பில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சிக்கு குழந்தைகள் கண்காணிப்பக நிர்வாகி ராஜி தலைமை வகித்தார். இதில், பழங்குடியினர் மக்கள் தங்களுக்கான அடிப்படை ஆவணங்களான, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட அட்டை உள்ளிட்டவை எவ்வாறு பெறுவது, எந்த அலுவலரை அணுக வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்தும் இப்பயிற்சியில் விளக்கப்பட்டது. பிறப்பு சான்றிதழ் இல்லாததால் குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க முடியாமல் சிரமப்படும் பழங்குடியினர், அச்சான்றிதழ்களை எவ்வாறு பெறுவது, மருத்துவமனைகளில் விடுபட்ட சான்றிதழ்களை பெற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தனலட்சுமி பங்கேற்று, அரசின் பல்வேறு நல திட்டங்கள் குறித்தும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் அளிக்கப்படும் சலுகைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இதில், ஊத்துக்காடு, நத்தாநல்லுார், உள்ளாவூர், சங்கராபுரம், வேண்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 65 பழங்குடியினர் பங்கேற்றனர்.