சுற்றுச்சுவர் இல்லாத உள்ளாவூர் பள்ளி மேய்ச்சலுக்காக சுற்றித்திரியும் கால்நடைகள்
வாலாஜாபாத்: உள்ளாவூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், மேய்ச்சலுக்காக கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. வாலாஜாபாத் ஒன்றியம், உள்ளாவூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, இதுவரை சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால், பள்ளி வளாகத்தில் அவ்வப்போது கால்நடைகள் மேய்ச்சலுக்கு சுற்றித்திரிகின்றன. மேலும், மாணவ - மாணவியர் விளையாட்டு நேரங்களில், பள்ளி வளாகத்தையொட்டி உள்ள சாலையை பயன்படுத்தும் நிலை உள்ளது. அம்மாதிரியான நேரங்களில் மாணவர்கள் விபத்திற்குள்ளாக வாய்ப்பு உள்ளது. மேலும், பள்ளி விடுமுறை மற்றும் இரவு நேரங்களில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர், பள்ளி வளாகத்திற்குள் புகுந்து, சமூக விரோத செயல்பாட்டிற்கான இடமாக பயன்படுத்துகின்றனர். எனவே, உள்ளாவூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.