புத்தேரியில் குடிநீர் நிரப்பாததால் வீணாகும் கால்நடை தொட்டி
காஞ்சிபுரம்: புத்தேரி ஊராட்சியில், கால்நடைகளின் தாகம் தீர்ப்பதற்காக கட்டப்பட்டுள்ள தொட்டியில், ஊராட்சி நிர்வாகம், குடிநீர் நிரப்பாததால், வீணாகி வருகிறது. காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி பிரதான சாலையில், கால்நடைகளின் தாகம் தீர்ப்பதற்காக, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில், 20,000 ரூபாய் செலவில், 2019ம் ஆண்டு குடிநீர் குழாயுடன், கால்நடை தொட்டி கட்டப்பட்டது. மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடுகள் தொட்டியில் தேக்கி வைக்கப்படும் குடிநீரை பருகி வந்தன. இந்நிலையில், சில மாதங்களாக ஊராட்சி நிர்வாகம் தொட்டியில் குடிநீர் நிரப்பாததால், மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் தாகத்துடன் திரும்பி செல்கின்றன. இதனால், கால்நடை தொட்டி பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, கால்நடை தொட்டியில் தினமும் குடிநீர் நிரப்ப ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புத்தேரி கிராம கால்நடை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.