திருப்புலிவனத்தில் ரூ.9.96 லட்சத்தில் சிமென்ட் கல் சாலை அமைப்பு
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆதிதிராவிடர் காலனிக்கு செல்லும் பிரதான சாலை, மண் சாலையாக இருந்தது.இச்சாலையை பயன்படுத்தி அப்பகுதிவாசிகள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர். மேலும், மழை நேரங்களில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், நிலைத் தடுமாறி அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர்.எனவே, அப்பகுதியில், புதிய சாலை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2024 --- 25ம் நிதி ஆண்டில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 9.96 லட்சம் மதிப்பில், சிமென்ட் கல் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.அதை தொடர்ந்து, சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணிகள் கடந்த மாதம் துவங்கி, தற்போது, முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.