மத்திய அரசின் தொகுப்பு வீடு கட்டும் திட்டம் செங்கலுக்கு பதில் சிமென்ட் கல்லால் அதிர்ச்சி
நெமிலி:மத்திய அரசின் தொகுப்பு வீடு கட்டும் திட்டத்தில், செங்கலுக்கு பதிலாக, சிமென்ட் கல் கட்டுமான பணிக்கு பயன்படுத்துவதால், பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கட்டுமான பணிகள் அரையும், குறையுமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்தில் கணபதிபுரம் கிராமம் உள்ளது. விருதசீர நதி கரை ஓரத்தில், பழங்குடி இனத்தவர்கள் சிலர் வசித்து வந்தனர். இதில், 14 நபர்களுக்கு சித்துார் ஊராட்சி பகுதியில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பி.எம்., ஜென்மன் திட்டத்தில் வீடு கட்டும் ஆணை வழங்கப்பட்டது. கடந்த 2022 - 23ம் நிதி ஆண்டு தலா ஒவ்வொரு வீட்டிற்கும், 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வீடு கட்டும் பணி துவங்கியது. வீட்டின் கட்டுமானம் செங்கல் வைத்து கட்டாமல், சிமென்ட் கல்லால் கட்டி வந்தனர். இதற்கு, பயனாளிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சில பயனாளிகள் பணம் கொடுக்கவில்லை என, கூறப்படுகிறது. இதனால், வீடு கட்டும் பணி அரையும், குறையுமாக போடப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாகியும், கட்டுமான பணிகள் நிறைவு செய்யாததால், பயனாளிகள் குடிசை வீடுகளில் வசிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து, கட்டுமான பணிகளை துரிதப்படுத்தி நிறைவு செய்ய வேண்டும் என, பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.