உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மத்திய ரயில்வே மகளிர் அணி பாக்சிங் போட்டியில் சாம்பியன்

மத்திய ரயில்வே மகளிர் அணி பாக்சிங் போட்டியில் சாம்பியன்

சென்னை: அசாம் மாநிலத்தில் நடந்த அகில இந்திய ரயில்வே பாக்சிங் போட்டி மகளிர் பிரிவில், தென்கிழக்கு மத்திய ரயில்வே மகளிர் அணி, சாம்பியன் பட்டத்தை வென்றது. என்.எப்.ரயில்வே விளையாட்டு சங்கம் சார்பில், இந்திய ரயில்வே அணிகளுக்கு இடையே, 'அகில இந்திய ரயில்வே பாக்சிங் சாம்பியன்ஷிப் - 2025' போட்டி, அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள என்.எப்.ரயில்வே பாக்சிங் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தியாவின் அனைத்து ரயில்வே அணிகளும், மண்டல அடிப்படையில் மோதுகின்றன. இரு பாலரிலும், 10 வகை பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. இதன் மகளிர் பிரிவு இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில், தென்கிழக்கு மத்திய ரயில்வே மகளிர் அணி, தன் சிறப்பான ஆட்டத்தால் 23 புள்ளிகள் குவித்து, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. அடுத்தபடியாக, வடக்கு ரயில்வே அணி 18 புள்ளிகள் பெற்று, இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இப்போட்டியில், மகளிர் 48 கிலோ பிரிவில், தென்கிழக்கு மத்திய ரயில்வே அணி வீராங்கனை பாவ்னா சர்மா 3 - 2 புள்ளி கணக்கில், வடமேற்கு ரயில்வே அணியின் ரஜ்னியை வீழ்த்தினார். அதேபோல், 54 கிலோ பிரிவில், தென்கிழக்கு மத்திய ரயில்வே அணியின் ரேனு 3 - 2 என்ற புள்ளி கணக்கில், கிழக்கு கோஸ்டல் அணியின் சவிதாவையும்; 57 கிலோ பிரிவில், தென்கிழக்கு மத்திய ரயில்வே அணியின் பூனம் 5 - 0 என்ற கணக்கில், வடமேற்கு ரயில்வேயின் மீனாட்சியையும் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றனர். தொடர்ந்து 65 கிலோ பிரிவில், தென்கிழக்கு மத்திய ரயில்வே அணியின் சசி 3 - 2 என்ற கணக்கில், வடக்கு ரயில்வே அணியின் பிராட்சியையும்; 70 கிலோ பிரிவில், தென்கிழக்கு மத்திய ரயில்வே அணியின் சனாமச்சா, 4 - 1 என்ற கணக்கில், வடக்கு ரயில்வேயின் சிவானியையும் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றனர். ஆண்களுக்கான போட்டிகள் நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி