காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் விமரிசை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆறாம் நாள் விழாவான நேற்று முன்தினம் இரவு யானை வாகன உத்சவம் நடந்தது.ஏழாம் நாள் உத்சவமான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. தேரில்,சுந்தராம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய கச்சபேஸ்வரர் நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வந்தார்.வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். எட்டாம் நாள் விழாவான இன்று இரவு குதிரை வாகனத்திலும், ஒன்பதாம் நாள் விழாவான நாளை காலை, ஆள் மேல் பல்லக்கு உத்சவம் நடக்கிறது. இரவு முருக்கடி சேவை தலமகிமை காட்சி உத்சவம் நடக்கிறது.இதில், 10ம் நாள் விழாவான வரும் 13ம் தேதி இரவு வெள்ளி தேரோட்டமும், 12ம் நாள் விழாவான வரும் 15ம் தேதி பஞ்சமூர்த்திகள் உத்சவமும் நடைபெறுகிறது. வரும் 18ம் தேதி, இரவு ஊஞ்சல் உத்சவத்துடன் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.விழாவையொட்டி, தினமும் மாலை 6:00 மணிக்கு திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் அரங்கில், வாரியார் ஆன்மிக தொண்டு மன்றத்தினரின், திருமுறை, சொற்பொழிவு, இசை, நடன நிகழ்ச்சி உள்ளிட்டவை நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம்,காஞ்சிபுரம் நகர செங்குந்தமகாஜன சங்கத்தினர், உள்ளிட்டோர் செய்துஉள்ளனர்.