செல்லம்மாள் நகர் பூங்கா பராமரிப்பு இல்லாததால் நிதி வீண்
உத்திரமேரூர்:செல்லம்மாள் நகர் பூங்காவை முறையாக பராமரிக்காததால், அரசு நிதி வீணாகியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். உத்திரமேரூர் பேரூராட்சி, செல்லம்மாள் நகரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில், 2023ல், 'அம்ரூத்' திட்டத்தின் கீழ், 34 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவை அப்பகுதி மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். தற்போது, ஒராண்டாக பூங்கா முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. பூங்கா வளாகத்தில் முட்செடிகளும், நடைபாதையில் புற்களும் வளர்ந்து வருகின்றன. பூங்காவில் உள்ள மின்விளக்குகளின் கேபிள்கள் திருடப்பட்டுள்ளதால், இருள் சுழந்து உள்ளது. இதனால், மாலை நேரங்களில் சிறுவர்கள், மகளிர், முதியோர் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பூங்கா, பராமரிப்பு இல்லாமல் அரசு நீதி வீணாகி வருகிறது. இந்த பூங்காவை சீரமைக்க அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, பராமரிப்பின்றி கிடக்கும் செல்லம்மாள் நகர் பூங்காவை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.