| ADDED : டிச 04, 2025 04:30 AM
குன்றத்துார்: 'டிட்வா' புயல் காரணமாக, தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, ஏரியின் நீர்மட்டம் 22.06 அடி உயரம், மொத்த கொள்ளளவு 3.1 டி.எம்.சி.,யாக இருந்தது. நீர் வரத்து 1,400 கன அடியாக உள்ளது. மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், மூன்று நாட்களுக்கு முன், 3,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. பின், மழை நின்றதால் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஏரியின் நீர் மட்டம், 22 அடியை கடந்த நிலையில், கரை மற்றும் செட்டர்களின் பாதுகாப்பு கருதி, 200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதேநேரத்தில், நீர்வரத்தை பொறுத்து இது படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. மழையின் தாக்கம் மற்றும் நீர்வரத்து குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில், உபரி நீர் வெளியேற்றப்படுவதை தொடர்ந்து, அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கும் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏரியை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, நேற்று ஆய்வு செய்தார்.