குடிமை பணி தேர்வு பயிற்சி: மீனவ இளைஞர்களுக்கு கலெக்டர் அழைப்பு
காஞ்சிபுரம்: மீனவர்களின் பட்டதாரி வாரிசு இளைஞர்கள், இந்திய குடிமை பணிகளுக்கான தேர்வு பயிற்சியில் சேர, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய குடிமை பணிகளுக்கான போட்டித் தேர்வில் பங்கேற்பதற்கான ஆயத்த பயிற்சியை, மீன்வளத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுகளான, பட்டாதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். நடப்பாண்டிற்கான இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் www.fisheries.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, நீலாங்கரையில் உள்ள மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில், பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ நவ., 25க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு 044- 24494247 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.