உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோயம்பேடில் பிரிகாஸ்ட் தயாரிப்பு பணி இடத்தை காலி செய்ய சி.எம்.டி.ஏ., உத்தரவு இடத்தை காலி செய்ய சி.எம்.டி.ஏ., உத்தரவு

கோயம்பேடில் பிரிகாஸ்ட் தயாரிப்பு பணி இடத்தை காலி செய்ய சி.எம்.டி.ஏ., உத்தரவு இடத்தை காலி செய்ய சி.எம்.டி.ஏ., உத்தரவு

சென்னை: கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நடந்து வரும் 'பிரிகாஸ்ட்' தயாரிப்பு பணிகளை நிறுத்தி, அந்த இடத்தை உடனே காலி செய்ய வேண்டுமென, நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்களுக்கு, சி.எம்.டி.ஏ., எச்சரிக்கை விடுத்துள்ளது. கோயம்பேடில், பூந்தமல்லி நெடுஞ்சாலை - 100 அடி சாலை சந்திக்கும் இடத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் பிரமாண்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது.மொத்தம் 4 ரவுண்டானா கொண்ட இதில், ஒரு ரவுண்டானா தே.மு.தி.க., கட்சி அலுவலகத்தை ஒட்டி அமைந்துள்ளது. 'இந்த பாலத்தின் கீழ் பகுதியில், 10 கோடி ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்படும்' என, சி.எம்.டி.ஏ., கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்கான வடிவமைப்பு தயாரிப்பு, கட்டுமான நிறுவனம் தேர்வு உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, களத்தில் நிலத்தை சீரமைத்து பூங்கா அமைக்கும் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரருக்கு, சி.எம்.டி.ஏ., அனுமதி வழங்கியது. இதன்படி, மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பூங்கா அமைக்கும் பணிகளை, ஒப்பந்ததாரர் துவக்கிஉள்ளார். ஆனால், இதற்கு இடையூறாக, அங்கு வேறு ஒரு ஒப்பந்ததாரர், மழைநீர் வடிகால் அமைப்பதற்கான 'கான்கிரீட் ஸ்லாப்'களை 'பிரிகாஸ்ட்' முறையில் தயாரித்து வருவது தெரிந்தது. இது குறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் விசாரித்ததில், நெடுஞ்சாலை துறையின் ஒப்பந்ததாரர் ஒருவர், மழைநீர் வடிகாலுக்கான கான்கிரீட் கட்டமைப்புகளை தயாரித்து வருவது உறுதியானது. இதையடுத்து அந்த இடத்தில் பிரிகாஸ்ட் கட்டுமான அமைப்புகள் தயாரிப்பு பணிகளை நிறுத்தவும், அப்பகுதியை காலி செய்யவும் உத்தரவிட்டனர். இது தொடர்பாக சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், அந்த வளாகத்தில் ஒட்டிய எச்சரிக்கை அறிவிப்பு: இந்த வளாகத்தில் சி.எம்.டி.ஏ., சார்பில் பசுமை பூங்கா அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இங்குள்ள பிரிகாஸ்ட் கான்கிரீட் கட்டுமான அமைப்புகள், தற்காலிக கொட்டகைகளை, செப்., 22க்குள் அப்புறப்படுத்தி, வெளியேற வேண்டும். தவறினால், செப்., 23க்குப் பின், இங்குள்ள பொருட்களை சி.எம்.டி.ஏ., கைப்பற்றி சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உட்படுத்தும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ