மாடு விற்ற விவகாரம் மாட்டு தொழுவத்தினர் மீது புகார்
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சி ஒப்படைத்த மாடுகளை 9,500 ரூபாய்க்கு தனி நபருக்கு விற்பனை செய்த பராமரிப்பு மைய நிர்வாகி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியில், சாலையின் நடுவே வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவாக சுற்றி திரியும் மாடுகளை, மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது பிடிக்கின்றனர். தனிநபருக்கு விற்பனை பிடிக்கப்படும் மாடுகள், உரிமையாளர்களிடம் திருப்பி தராமல், மாடுகள் கட்டி பாதுகாக்கப்படும் இடத்தில் ஒப்படைக்கின்றனர். இவ்வாறு, ஏராளமான மாடுகளை பிடித்து, காஞ்சிபுரம் அருகே, தனியார் நடத்தும் மாடுகள் கட்டி பாதுகாக்கப்படும் இடத்தில், மாநகராட்சி அதிகாரிகள் ஒப்படைத்து வந்தனர். இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன் காவலான்கேட், ஓரிக்கை உள்ளிட்ட இடங்களில் இருந்து பிடிக்கப்பட்ட ஆறு மாடுகளை, களக்காட்டூர் ஊராட்சியில் உள்ள விச்சந்தாங்கல் கிராமத்தில், உள்ள மாடுகள் கட்டி பாதுக்காக்கப்படும் இடத்தில் ஒப்படைத்துள்ளனர். அங்கு இருந்த ஆறு மாடுகளில், ஒரு பசு மாட்டை, சம்பந்தப்பட்ட மாடுகளை கட்டி பாதுகாக்கும் அமைப்பினர், தனி நபருக்கு 9,500 ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பது மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியவந்தது. போலீசார் விசாரணை இதையடுத்து, மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் சீனிவாசன் என்பவர், இதுபற்றி முழு விபரம் அடங்கிய கடிதத்தை, மாநகராட்சி கமிஷனர் நவேந்திரனுக்கு அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன், மாடுகள் கட்டி பாதுகாப்பு அமைப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, மாகரல் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு புகார் கடிதம் அளித்துள்ளார். புகார் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.