புகார் பெட்டி
சிறுமின்விசை குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வருமா?
காஞ்சிபுரம் மாநகராட்சி, 45வது வார்டு எஸ்.எஸ்., நகரில், அப்பகுதிவாசிகளின் கூடுதல் குடிநீர் தேவைக்காக, 10 ஆண்டுகளுக்கு முன் சிறுமின்விசை குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. வீட்டு உபயோக குடிநீர் தேவைக்கு, அப்பகுதிவாசிகள் குடிநீர் தொட்டியை பயன்படுத்தி வந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு முன், குடிநீர்தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக,ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்ட நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதுடைந்தது.இதை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை. இதனால், குடிநீர் தொட்டி பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, மின்மோட்டாரை சீரமைத்து, குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கே.ரங்கசாமி, காஞ்சிபுரம். சாலையோர தடுப்பு சேதம் சீரமைக்க எதிர்பார்ப்பு
களியாம்பூண்டியில் இருந்து ஒழுகரை, சிலாம்பாக்கம் வழியே, வந்தவாசி -- காஞ்சிபுரம் நெடுஞ்சாலையை இணைக்கும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.சிலாம்பாக்கம் பகுதியில் செல்லும் சாலையோரத்தில், நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் வாகன ஓட்டிகள் விழுந்து, விபத்தில் சிக்காமல் இருக்க, சில ஆண்டுக்கு முன், இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன.தற்போது, இரும்பு தடுப்புகள் சேதமடைந்து, கீழே சரிந்து கிடக்கிறது. எனவே, சேதமடைந்த இரும்பு தடுப்புகளை சீரமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். - ச.மதிவேந்தன் , சிலாம்பாக்கம். கோவில் வாசலில் கழிவுநீர் காஞ்சியில் பக்தர்கள் அவதி
பெருமாளின் 108 திவ்யதேசங்களில்ஒன்றான யதோக்தகாரி பெருமாள் கோவிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சன்னிதி தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக வழந்தோடும் கழிவுநீர், கோவில் நுழைவாயில் அருகில் குட்டைபோல தேங்கியுள்ளது. இதனால், கோவிலுக்கு வந்துசெல்லும் பக்தர்கள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. கழிவுநீர் தேக்கத்தால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும்நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம்.முருகேசன், காஞ்சிபுரம். தடுப்புச்சுவர் இல்லாத குளம் வாகன ஓட்டிகள் அவஸ்தை
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் மாகாணியம் ஊராட்சியில் இருந்து, சேத்துப்பட்டு வழியாக ஸ்ரீபெரும்புதுார், மணிமங்கலம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையில், மாகாணியம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அருகே குளம் உள்ளது. சாலையோரம் உள்ள இந்த குளத்தில் தடுப்பு இல்லாததால், அவ்வழியாக வரும் வாகனங்கள் குளத்தில் விழுந்து, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாலையோரம் உள்ள குளத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். - சு.நாராயணன், மாகாணியம். சேறும், சகதியுமாக மாறிய முத்து மாரியம்மன் தெரு
வாலாஜாபாத் ஒன்றியம் திம்மராஜம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்டது சீயமங்கலம். இக்கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் தெருவில், 30 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதிவாசிகள், முத்துமாரியம்மன் கோவில் தெருவை பயன்படுத்தி, வாலாஜாபாத் - காஞ்சிபுரத்திற்கு செல்லும் பிரதான சாலையை அடையலாம்.இந்நிலையில், முத்து மாரியம்மன் கோவில் தெருவின் ஒரு பகுதி, கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், மழை நேரங்களில் அத்தெரு சாலை சேறும் சகதியுமாக மாறி விடுவதால், வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, பழுதடைந்த இச்சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.