ஒரகடம் மேம்பாலத்தில் விரிசல் செடிகளால் வலுவிழக்கும் அபாயம்
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலில் செடிகள் வளர்ந்துள்ளதால், வலுவிழந்து கான்கிரீட் பெயர்ந்து சேதமாகி வருகிறது. ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையும், வண்டலுார் -- வாலஜாபாத் சாலையும் இணையும் நான்கு சாலை சந்திப்பில், ஒரகடம் மேம்பாலம் உள்ளது. இந்தப் பாலம் வழியாக, காஞ்சிபுரம், வேலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இருந்தும், இந்த மேம்பாலத்தின் பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளது. மேம்பாலத்தின் மீதுள்ள மின் கம்பங்களில் சில உடைந்து விரிசல் ஏற்பட்டு உள்ளது. அதேபோல, பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலில், ஆங்காங்கே அரச செடி வளர்ந்து உள்ளது. இதனால், பாலம் வலுவிழந்து கான்கிரீட் பெயர்ந்து சேதமாகி வருகிறது. எனவே, மேம்பாலத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றுவதுடன், பாலத்தை முறையாக பராமரிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.