நடைபாதை ஓட்டையால் வாலாஜாபாத்தில் ஆபத்து
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் இருந்து, ஒரகடம் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில், ரயில்வே பாலத்தை நோக்கி செல்லும் பகுதியில், மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மழை நீர் வடிகால்வாய் மீது, மக்கள் நடந்து செல்ல வசதியாக நடைபாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், அரசு பொது மருத்துவமனை மற்றும் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு, இந்த நடைபாதையை பயன்படுத்தி, பயணியர் சென்று வருகின்றனர்.இந்த சாலையோர நடைபாதையில், அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளி அருகே, அடுத்தடுத்து இரண்டு இடங்களில், சிமென்ட் கான்கிரிட் தளம் உடைந்துள்ளது.அதனால், இந்த நடைபாதையில் நடந்து செல்லும் மக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிர்பாராத விதமாக நடைபாதை ஓட்டைக்குள் விழுந்து, விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.எனவே, வாலாஜாபாத் பேருந்து நிலைய சாலையில், நடைபாதை மீது ஏற்பட்டுள்ள ஓட்டையை சரி செய்ய, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.