சாலவாக்கம் அரசு ஐ.டி.ஐ.,யில் சேர அவகாசம் வரும் 31 வரை நீட்டிப்பு
உத்திரமேரூர்:சாலவாக்கம் அரசு ஐ.டி.ஐ.,யில் இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கை வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜா கூறினார். உத்திரமேரூர் தாலுகா, சாலவாக்கத்தில் அரசு ஐ.டி.ஐ., அமைக்கப்படும் என, இந்தாண்டு தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அரசு அறிவித்தது. அதன்படி, சாலவாக்கத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டடம் கட்டப்படும் வரை, வாடகை கட்டடத்தில் தொழிற்பயிற்சி நிலையத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக, செங்கல்பட்டு சாலையோரத்தில் வாடகைக்கு கட்டடம் எடுக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. மாணவர் சேர்க்கை முடிந்து, கடந்த ஆக., 1ல் வகுப்புகள் துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அறிவித்தபடி முதலாமாண்டு வகுப்புகள் துவங்கப்படவில்லை. இது குறித்து சாலவாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜா கூறியதாவது: சாலவாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கை முடிந்து, ஆக.,1ல் வகுப்புகள் துவங்கப்பட இருந்தது. ஆனால், தமிழக அரசு அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் மாணவர் சேர்க்கையை ஆக.,31 வரை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்த மாத இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.