உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குறைந்து வரும் பயிர் காப்பீட்டாளர்கள் எண்ணிக்கை

குறைந்து வரும் பயிர் காப்பீட்டாளர்கள் எண்ணிக்கை

காஞ்சிபுரம்:கடந்த ஆண்டு காட்டிலும், நடப்பாண்டு பயிர் காப்பீடு பெற விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தேதி நீட்டிப்பிற்கு பிறகும், அதிகரிப்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய வட்டார வேளாண் விரிவாக்க மையங்களின் கட்டுப்பாட்டில், 1.50 ஏக்கர் பரப்பளவில், விவசாயம் செய்யப்படுகிறது.சொர்ணவாரி, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்கள் நெல் பயிரிடப்படுகின்றன. இந்த பயிர்களுக்கு, சிறப்பு பருவம் என, அழைக்கப்படும் காரீப், ரபி ஆகிய இரு பருவங்களில், பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.இதில், ரபி பருவத்தில் மழையால் பாதிக்கப்படும் நெற்பயிர்களுக்கு இழப்பீடு மற்றும் கோடை காலங்களில் வறட்சியால் பாதிக்கப்படும் நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.அதன்படி, 2023- - 24ம் ஆண்டு காரீப் பருவத்தில், 15,799 ஏக்கர் மட்டுமே, 34,621 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். இதில், 8,611 விவசாயிகள் 1.24 கோடி ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளனர்.அதேபோல, ரபி பருவத்தில், 84 ஏக்கர் பரப்பளவிற்கு, 80 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தனர். அந்த பருவத்திற்கு யாருக்கும் இழப்பீடு வழங்கவில்லை.நடப்பாண்டு, காரீப் பருவத்திற்கு, 1,073 ஏக்கருக்கு, 1,715 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். அதேபோல, சிறப்பு பருவம் என, ரபி பருவத்திற்கு, 10,480 ஏக்கருக்கு, 24,162 விவசாயிகள் நவ.,15ம் தேதி வரையில் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.விவசாயிகள் சரியாக பயிர் காப்பீடு செய்யாததால், நவம்பர் மாதம் 30ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பயிர் காப்பீடு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.கடந்த ஆண்டு காரீப், ரபி ஆகிய இரு பருவமும், 15,817 ஏக்கர் பரப்பளவிற்கு, 34,707 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து உள்ளனர். நடப்பாண்டு நவ.,15ம் தேதி வரையில் 11,554 ஏக்கருக்கு, 25,877 விவசாயிகள் மட்டுமே பயிர் காப்பீடு செய்துள்ளனர்.இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், ''பயிர் காப்பீடு செய்தால், சேதத்திற்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும். அதை விடுத்து, குறிப்பிட்ட கிராமங்களை தேர்வு செய்து, இழப்பீடு வழங்கினால் எங்களுக்கு எப்படி ஆர்வம் வரும். இருப்பினும், பயிர் காப்பீடு செய்து வருகிறோம்,'' என்றார்/இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பயிர் காப்பீடு பொருத்தவரையில், இழப்பீடு கிடைக்கும் என, நோக்கத்துடன் பதிவு செய்யக்கூடாது. மழையால் நெற்பயிர் பாதிக்கப்பட்ட பின், வருந்தக்கூடாது என, பயிர் காப்பீடு செய்ய அறிவுரை வழங்கி வருகிறோம்.கடந்த ஆண்டு காட்டிலும், நடப்பாண்டு நேற்று வரையில் குறைவு தான். தற்போது, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை