காஞ்சி தும்பவனம் மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
காஞ்சிபுரம்:நவராத்திரி விழாவையொட்டி, காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி கணேச நகர் தும்பவனம் மாரியம்மன், லட்சுமி அலங்காரத்தில், ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி, கணேச நகர், எம்.பி.டி., நகரில் அமைந்துள்ள தும்பவனம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 21ம் தேதி துவங்கியது. இதில், தினமும் மாலை 6:00 மணிக்கு பாலா திரிபுரசுந்தரி, கவுமாரி, அன்னபூரணி, காமாட்சி என பல்வேறு அலங்காரத்தில் தும்பவம் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதில், ஏழாம் நாளான நேற்று முன்தினம் இரவு தும்பனம் மாரியம்மனுக்கு லஷ்மி அலங்காரம் செய்யப்பட்டு, 500, 200, 100, 50, 20, 10, 1 ரூபாய் என, மொத்தம் 62 ஆயிரத்திற்கு, புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு மஹா தீப ஆராதனை நடந்தது. ரூபாய் நோட்டுகளால் லஷ்மி அலங்காரத்தில் அருள்பாலித்த தும்பவனம் மாரியம்மனை திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.