காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், மேயர் - -கவுன்சிலர்கள் பிரச்னை 7 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், பாலம் கட்டும் பணி நடக்காதது, வணிக வளாகம் கட்டாதது என, மக்கள் தேவைக்கான பணிகள் பல கிடப்பில் போடப்பட்டுள்ளன. நகர்நல வாழ்வு மையங்கள் டாக்டர்கள் இல்லாததால், செயல்பட முடியாமல் கிடக்கின்றன.காஞ்சிபுரம் மாநகராட்சியில், மேயர் மகாலட்சுமிக்கும், அதிருப்தி கவுன்சிலர்கள் 30க்கும் மேற்பட்டோருக்கும் இடையே, 7 மாதங்களாகவே பிரச்னை நீடித்து வருகிறது. இதனால், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய இரு மாதங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட மாநகராட்சி கூட்டங்கள் நடத்த முடியாமல் போனது. தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை.கடந்த ஜனவரி மாதம் முதல், ஜூலை வரை, 7 மாதங்கள் மாநகராட்சி கூட்டம் நடத்தப்படாததால், எந்தவிதமான வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ள முடியாமல், மாநகராட்சி நிர்வாகத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.உதாரணமாக, உலக வங்கி நிதியுதவியில், 300 கோடி ரூபாய் மதிப்பில், புதிய குடிநீர் திட்ட பணிகள் டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்க உள்ளன. முன்னதாக, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஆனால், மாநகராட்சி கூட்டமே ஏழு மாதங்களாக நடக்காததால், தீர்மானமும் நிறைவேறாமல், பணிகளும் துவங்காமல் உள்ளது.கடந்த 7 மாதங்களாக, மாநகராட்சி நிர்வாகமே ஸ்தம்பித்து போயிருப்பதால், முக்கிய கட்டுமான பணிகளை துவங்காமலும், கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடங்களை திறக்காமலும், வளர்ச்சி பணிகள் நின்று போயுள்ளன. இதனால், அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.மாநகராட்சிக்குட்பட்ட தாட்டித்தோப்பு முருகன் குடியிருப்பு செல்லும் வழியில் உள்ள வேகவதி ஆற்றின் குறுக்கே, ஆற்று வெள்ளத்தால் உடைந்த பாலத்தை மீண்டும் கட்ட, 2.2 கோடியில் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு, அமைச்சர் அன்பரசன், லோக்சபா தேர்தல் முன்பாகவே அடிக்கல் நாட்டி சென்றார். ஆனால், பழைய பாலத்தை இடித்து அகற்ற, 9.3 லட்ச ரூபாய் தேவை என, கடந்தாண்டு டிசம்பரில் தீர்மானம் நிறைவேற்றியும், 7 மாதங்களாக பணிகள் துவங்காமல் உள்ளது. அமைச்சர் அடிக்கல் நாட்டியும், பல மாதங்கள் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாநகராட்சியில், சின்ன காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் என, 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வந்தன. இதைடுத்து, 15வது நிதிக்குழு மானிய நிதியில், தலா 25 லட்ச ரூபாயில், பல்லவன் நகர், விஷ்ணு நகர் உள்ளிட்ட 5 இடங்களில், நகர்நல வாழ்வு மையங்கள் கட்டி திறக்கப்பட்டன. கடந்தாண்டு, வானவில் நகர், காந்தி நகர், தேரடி தெரு என, மேலும் 5 இடங்களில் நகர்நல வாழ்வு மையங்கள் கட்டி முடிக்கப்பட்டன. ஆனால், இந்த மையங்களுக்கு தேவையான டாக்டர்கள், ஊழியர்கள் நியமிக்காததால், இதுவரை இக்கட்டடங்கள் திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வராமல் உள்ளன.மேயர் மகாலட்சுமியின் 9வது வார்டில், தொண்டை மண்டல ஆதீன மடம் இயங்கி வருகிறது. மடத்தின் மதில் சுவர் அருகே, 22 லட்ச ரூபாய் மதிப்பில், மாநகராட்சி நிர்வாகம், பொது கழிப்பறை கட்டியது. மடம் அருகே கழிப்பறை கட்டுவதற்கு மடம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கழிப்பறை பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்த நிலையில், பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், கடந்தாண்டு ஜூலை மாதம், இந்த கழிப்பறை கட்டடத்தை வணிக வளாகமாக மாற்ற, 7.5 லட்ச ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை வணிக வளாகமாக மாற்றப்படாமல், கட்டப்பட்ட கழிப்பறை வீணாக காட்சியளிக்கிறது. இங்கு கட்ட வேண்டிய கழிப்பறை, அண்ணா பூங்கா அருகே கட்டப்பட்டுள்ளது. ஆனால், வணிக வளாகமாக மாற்ற வேண்டிய நடவடிக்கைகள் கிடப்பில் உள்ளன.மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும், இதுபோன்று பல்வேறு பணிகள் கடந்த 7 மாதங்களாகவே கிடப்பில் உள்ளன. அடுத்தகட்ட திட்டங்களுக்கு தேவையான தீர்மானங்கள் நிறைவேற்றவும், நிதி ஒதுக்கவும் முடியாமல், கடந்த 7 மாதங்களாக, மேயர் - -கவுன்சிலர்கள் இடையேயான பிரச்னையே பெரிதாக இருந்து வருகிறது.மாநகராட்சி பொறியாளர் ஒருவரிடம் கேட்டபோது, 'தாட்டித்தோப்பில் வேகவதி ஆற்றின் குறுக்கே, அடுத்த வாரம் பாலம் கட்டும் பணி துவங்கிவிடும். இப்பாலம், 60 மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும் கொண்டதாக கட்டப்படும். இப்பாலம், 60 மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும் கொண்டதாக கட்டப்படும்' என்றார்' என்றார்.மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'நகர்நல வாழ்வு மையங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டன. டாக்டர்கள் நியமனம் செய்ய காத்திருக்கிறோம். ஏற்கனவே உள்ள டாக்டர்கள் கூடுதல் பொறுப்பில் பணியாற்றி வருகின்றனர். ரெகுலர் டாக்டர்கள் நியமனம் செய்தவுடன், நகர்நல வாழ்வு மையங்கள் செயல்படும்' என்றார்