உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செவிலிமேடு ராமானுஜர் கோவிலை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

செவிலிமேடு ராமானுஜர் கோவிலை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்;செவிலிமேடு ராமானுஜர் கோவில் சுவரில் செடிகள் வளர்ந்துஉள்ளதால், சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சிபுரம் செவிலிமேடு, சாலை கிணறு ராமானுஜர் கோவில், காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ராமானுஜர் கோவிலில் நடைபெறும் அனுஷ்டான குளம் உத்சவத்தின்போது, வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வேடுவர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ராமானுஜர் அவதரித்த திருவாதிரை திருநட்சத்திரைத்தையொட்டி மாதந்தோறும் திருவாதிரையன்று சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற ராமானுஜர் கோவில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எனவே, இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து இக்கோவிலை புதுப்பிக்க ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர். இந்நிலையில், கோவில் சுவரில் அரச மர செடிகள் வளர்ந்து விரிசல் ஏற்பட்டு வருவதால், நாளடைவில் கட்டடம் முற்றிலும் வலுவிழக்கும் நிலை உள்ளது. எனவே, செவிலிமேடு ராமானுஜர் கோவிலை சீரமைக்கும் திருப்பணியை விரைந்து துவக்க, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் செயல் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான ராஜலட்சுமி கூறியதாவது: செவிலிமேடு ராமானுஜர் கோவிலை புனரமைக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், டெண்டர் விடப்பட்டு கோவிலில் திருப்பணி துவக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி