மேல்பாக்கம் வரதீஸ்வரர் கோவிலை புதுப்பிக்க பக்தர்கள் வலியுறுத்தல்
உத்திரமேரூர், :சிதிலமடைந்து வரும் மேல்பாக்கம் வரதீஸ்வரர் கோவிலை புதுப்பிக்க பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் தாலுகா, மேல்பாக்கத்தில் வரதாம்பிகை சமேத வரதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். தற்போது, கோவில் முறையாக பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து வருகிறது. கோவிலின் முன் பக்க சுவர் சேதமடைந்து காரைகள் பெயர்ந்து வருகின்றன. அதிலிருந்து, அரச மரச்செடிகள் வளர்ந்து வருவதால், கோவில் முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழ வாய்ப்பு உள்ளது. எனவே, வரதீஸ்வரர் கோவிலை சீரமைக்க, ஹிந்து அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து உத்திரமேரூர் ஹிந்து அறநிலையத் துறை ஆய்வாளர் ப்ரீத்திகா கூறுகையில், ''மேல்பாக்கம் வரதீஸ்வரர் கோவிலை புதுப்பிக்க, திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதற்கான, ஒப்புதல் கிடைத்தவுடன், சீரமைப்பு பணிகள் துவங்கும்,'' என்றார்.