குடிநீருடன் கழிவுநீர் கலப்பு இடத்தை கண்டறிவதில் சிக்கல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பாவாப்பேட்டை தெரு, பங்காரு ஏசப்பன் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இரண்டு மாதங்களாக மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தும், கழிவுநீர் கலக்கும் இடத்தை கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலப்பதாக அடிக்கடி புகார்கள் வருவது வழக்கம். சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்திலும், 8வது வார்டில் உள்ள கிழக்கு ராஜவீதியில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பதாக, தி.மு.க., கவுன்சிலர் சூர்யா கடுமையாக அதிகாரி மீது புகார் தெரிவித்திருந்தார். அதுபோல, மாநகராட்சியில் உள்ள 31, 32, 33 ஆகிய மூன்று வார்டுகளில் உள்ள பல தெருக்களில், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவது பற்றி நீண்ட நாட்களாகவே அப்பகுதியினர் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்களிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளும், இரு மாதங்களாக, பல்வேறு இடங்களில் செல்லும் குடிநீர் குழாய்களை துண்டித்து அதிலிருந்து குடிநீர் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர். கோரிக்கை மூன்று வார்டுகளிலும், பல இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தும், கழிவு நீர் கலக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லை என, கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர். பாவாபேட்டை தெரு, பங்காரு ஏசப்பன் தெரு என பல இடங்களில், இரு மாதங்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்தபடியே உள்ளது. வார்டு மக்களுக்கு உடல் உபாதை ஏற்படும் முன்பாக, மாநகராட்சி அதிகாரிகள், விரைவாக கண்டறிந்து, குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் இடத்தை சரி செய்ய வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் குழாயில் உடைப்பு காஞ்சிபுரம் மாநகராட்சி, சதாவரம் பிரதான சாலையில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், ஒரு வாரமாக குடிநீர் வீணாகி வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 1,060 தெருக்களில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல் மற்றும் வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட பைப் லைன் வாயிலாக, மாநகராட்சி சார்பில், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி 49வது சதாவரம் பிரதான சாலையோரம் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரமாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள வீட்டு குழாயில், கலங்கலான குடிநீர் வருவதாக பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே, சதாவரம் பிரதான சாலையில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.