உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நீர்வரத்து கால்வாய் மீது அமைக்கப்பட்ட பாதை அகற்றம்

நீர்வரத்து கால்வாய் மீது அமைக்கப்பட்ட பாதை அகற்றம்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில், அனுமதியின்றி நீர்வரத்து கால்வாய் மீது அமைக்கப்பட்ட பாதையை, தினமலர் செய்தியின் எதிரொலியாக நீர்வளத் துறையினர் அகற்றினர். உத்திரமேரூர் பேரூராட்சி, டாக்டர்.எம்.ஜி.ஆர்., நகரில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள, பிரதான சாலையோரத்தில் ஏரி நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாயையொட்டி ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் வீட்டுமனை பிரிவுகள் அமைத்து வருகின்றனர். இந்த மனைப்பிரிவுகளில் இருந்து, பிரதான சாலைக்கு செல்ல பாதை இல்லாமல் இருந்தது. இதனால், ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் சில தினங்களுக்கு முன், கால்வாய் மீது அனுமதியின்றி பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கால்வாயில் புதைக்கப்பட்டிருந்த, ராட்சத பைப்களை நீர்வளத் துறையினர் நேற்று அகற்றினர். இது குறித்து உத்திரமேரூர் நீர்வளத் துறை உதவி பொறியாளர் கண்ணன் கூறியதாவது: நீர்ப்பாசன கால்வாய்களின் மீது பாதை அமைப்போர், முறையாக அனுமதி பெறவேண்டும். அனுமதி பெற்றவுடன் ராட்சத பைப்களை கொண்டு பாதை அமைப்பதை தவிர்த்து, சிமென்ட் கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்காமல் விதிமுறைகளை மீறி பாலம் அமைத்தால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !