மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு சார்பில் காதொலி கருவி, சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், ஊன்றுகோல், பிரெய்லி கை கடிகாரம் என, பல உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், அவர்கள் பராமரிப்புக்காக வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை முக்கியமானதாக உள்ளது.
பாதிப்பு
இதன்படி, மன வளர்ச்சி குன்றியவர்கள், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என, அதிக சதவீதம் பாதிப்படைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதம் 2,000 ரூபாய், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்படுகிறது. அதேபோல், 40 சதவீதத்திற்கு மேல் உடல் பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதம் 1,500 ரூபாய், வருவாய் துறை சார்பில் வழங்கப்படுகிறது. சிரமம்
இந்த உதவித்தொகை, 2023ம் ஆண்டு முதல் முறையாக வழங்கப்படவில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், வருவாய் துறை உதவித்தொகைக்காக, 2,000 பேரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உதவித்தொகைக்காக, 150 பேரும் காத்திருக்கின்றனர். பராமரிப்பு உதவித்தொகை மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு பெரும் உதவியாக உள்ள நிலையில், ஆண்டுக்கணக்கில் உதவித்தொகை கிடைக்காததால், பொருளாதார ரீதியாக சிரமப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இழுத்தடிப்பு உதவித்தொகை மட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளுக்கான பிற சேவைகளும் சரியாக கிடைக்காததால், மாற்றுத்திறனாளிகள் புலம்புகின்றனர். ஆரம்பாக்கம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசின் வீடு கட்டும் திட்ட பணிகள் கிடப்பில் இருப்பதாகவும், கூரம் கிராமத்தில் வழங்கப்பட்ட பட்டா இடங்களை அளவீடு செய்து தராமல், அதிகாரிகள் இழுத்தடிப்பதாகவும் கூறுகின்றனர். இதுகுறித்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை படிப்படியாக வழங்கி வருகிறோம். வருவாய் துறை சார்பில் உதவித்தொகை வழங்க வேண்டியுள்ளது. அத்துறை அதிகாரிகளிடமும் பேசி வருகிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட பட்டா இடங்களை, வருவாய் துறை மூலம் அளந்து கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். தாசில்தார் ஒருவரிடம் கேட்டபோது, 'சமூக பாதுகாப்பு திட்டத்திற்கான நிதியை அரசு விடுவித்தால், வழங்க தயாராக உள்ளோம்' என்றார்.
பொருளாதார நெருக்கடி
உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள், 2023ம் ஆண்டு முதல் காத்திருக்கின்றனர். இதுவரை நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்கின்றனர். மாற்றுத்திறனாளிகள் பொருளாதாரத்தில் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு நிதி ஒதுக்கி, விரைவாக உதவித்தொகை வழங்க வேண்டும். - பி.பாலாஜி, மாவட்ட தலைவர், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், காஞ்சிபுரம்.
நிதி வந்தால் வீடு கிடைக்கும்
மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டும் பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அரசின் திட்டத்தில், 3,000 பேருக்கு வீடுகள் கட்டி தந்துள்ளோம். மாற்றுத்திறனாளிகளுக்கு சில மாதங்கள் முன், ஆரம்பாக்கத்தில் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதற்குமுன், வீடு கட்ட ஆணை வழங்கிவிட்டோம். மாற்றுத்திறனாளிகளுக்காக முன்னுரிமை அடிப்படையில் நிதி கேட்டுள்ளோம். நிதி வந்தால் வீடு கட்டி கொடுக்கப்படும். - ஆர்த்தி, திட்ட இயக்குநர், ஊரக வளர்ச்சி முகமை, காஞ்சிபுரம் மாவட்டம்