பி.டி.ஓ., அலுவலக வளாக வழியில் நிறுத்தும் லாரிகளால் இடையூறு
வாலாஜாபாத்:வாலாஜாபாதில் விதிமீறல் தொடர்பான விசாரணைக்கு உட்படுத்தப்படும் லாரிகள், பி.டி.ஓ., அலுவலக வளாகத்திற்குள் நிறுத்தப்படுவதால், அலுவலகத்திற்கு வரும் பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. வாலாஜாபாத் பி.டி.ஓ., அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகம் அருகருகே இயங்குகிறது. இந்த இரண்டு அலுவலகத்திற்கும் ஒருங்கிணைந்த வளாகம் உள்ளது. பி.டி.ஓ., அலுவலகம் ஒட்டிய சாலையை கடந்துதான் தாசில்தார் அலுவலத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. இந்நிலையில், வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதி சாலைகளில், அதிக பாரம் ஏற்றுதல், தார்ப்பாய் மூடாமல் மற்றும் அதிவேகமாக இயக்குதல் என வீதிமீறல் தொடர்பான கனரக வாகனங்களை வருவாய்த் துறை மற்றும் காவல் துறை பிடித்து, பி.டி.ஓ., அலுவலக வளாகத்திற்குள் கொண்டு வந்து நிறுத்துகின்றனர். அங்கு அந்த வாகனங்களின் உரிமங்கள் சரி பார்க்கப்பட்டு அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்படும் கனரக வாகனங்கள், பி.டி.ஓ., அலுவலக வளாகத்தின் மையப் பகுதி வழியில் நிறுத்தப்படுகிறது. இதனால், பி.டி.ஓ., மற்றும் தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் ஊழியர் மற்றும் மனுதாரர்கள் உள்ளிட்ட பலரும் அவதிப்படுகின்றனர். எனவே, வாலாஜாபாத் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதை செய்வதை தவிர்க்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.