மே 28ல் நான்கு சட்டசபை தொகுதிக்கான தி.மு.க., தேர்தல் ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம்:தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியின் பதவிக்காலம் முடிய இன்னும் 10 மாதங்களே உள்ளது. இந்நிலையில், 2026 க்கான சட்டசபை தேர்தலுக்கான பணிகளை முன்கூட்டியே தி.மு.க., முடுக்கி விட்டுள்ளது.தமிழகத்தில் மண்டலம் வாரியாக பிரித்து, அமைச்சர்களை மண்டல பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது. கடலுார், விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.,பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய சட்டசபை தேர்தலுக்கான பணிகள் பற்றி ஆலோசனை கூட்டம் வரும் 28 ல் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், செய்யூர் என, 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன.இந்த நான்கு சட்டசபை தொகுதிகளிலும், தேர்தலுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள், வியூகம், பிரசாரம், பொதுக்கூட்டம் நடத்த வேண்டிய பணிகள் என பல்வேறு விஷயங்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பேச உள்ளனர்.வரும் 28 ல், காலை 9:00 மணிக்கு செய்யூரிலும், 11:00 மணிக்கு மதுராந்தகத்திலும், மதியம் 2:00 மணிக்கு உத்திரமேரூரிலும், மாலை 4:00 மணிக்கு காஞ்சிபுரத்திலும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க.,- பா.ம.க., -பா.ஜ., என பல்வேறு கட்சியினருக்கு முன்னதாக, தி.மு.க., தனது தேர்தல் பணிகளை துவக்கி உள்ளது.