உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  குடிநீர், தெருவிளக்கு இல்லாத கனவு இல்ல வீடுகள்

 குடிநீர், தெருவிளக்கு இல்லாத கனவு இல்ல வீடுகள்

காஞ்சிபுரம்: கனவு இல்ல திட்ட' குடியிருப்புகளுக்கு, புதிய குடிநீர் குழாய் மற்றும் தெரு விளக்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில், 274 ஊராட்சிகளில், 1,354 குக்கிராமங்கள் உள்ளன. இதில், 2011ம் ஆண்டு சமூக பொருளாதாரம் மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டன. குடிசை வீடு இருக்கும் நபர்களுக்கு, வீடு கட்டுவதற்கு சில பயனாளிகளை தேர்வு செய்தனர். இதில், மத்திய அரசின் பிரதமர் வீடு வழங்கும் திட்டம் மற்றும் மாநில அரசின் பசுமை வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகளை கட்டியுள்ளனர். இதையடுத்து, ஆவாஸ் பிளஸ் திட்டத்தில், 2018ம் ஆண்டு வீடு தேவைப்படுவோருக்கு, ஊரக வளர்ச்சி துறையினர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர். தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், பசுமை வீடு வழங்கும் திட்டம் முடக்கப்பட்டு, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு, 2021ம் ஆண்டு ஊரக வளர்ச்சி துறையினர் மீண்டும் கணக்கெடுப்பு நடத்தினர். அடுத்த, 2022ம் ஆண்டு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்கு, மீண்டும் கணக்கெடுப்பு நடத்தினர். இதன் மூலமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 17,653 வீடுகள் தேவைப்படும் என, புள்ளி விபரம் தெரிய வந்துள்ளது. முதற்கட்டமாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம், மாநில அரசின் கனவு இல்லம் கட்டும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 3,453 பயனாளிகளுக்கு, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் ஆணையை, ஊரக வளர்ச்சி துறையினர்அளித்தனர். இதில், 2,855 நபர்கள் மட்டுமே வீடு கட்டும் பணியை துவக்கி, 2800 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதி ஆண்டில், 3,000 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. கடகால், தளம் என, பல்வேறு நிலைகளில், 70 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கடந்த நிதி ஆண்டு கனவு இல்ல திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட 2,800 வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர், சாலைகள் ஆகிய அடிப்படை வசதிகளை ஊரக வளர்ச்சி துறையினர் செய்து கொடுக்கவில்லை. மேலும், நடப்பாண்டு கட்டி வரும் வீடுகளுக்கு கட்டுமான தடவாளப் பொருட்களை எடுத்து செல்ல ஜல்லி சாலை போடவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், வீடு கட்டி முடித்தவர்கள் புதிய வீட்டில் குடியேற முடியவில்லை. புதிதாக வீடு கட்டுவோர், கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல முடியவில்லை. எனவே, மாநில அரசின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு சாலை, குடிநீர், மின்சாரம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, வாலாஜா பாத் வட்டாரத்தைச் சேர்ந்த கனவு இல்ல திட்ட பயனாளிகள் கூறியதாவது: மாநில அரசின் கனவு இல்ல திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு தேவையான, சாலை, குடிநீர், மின்சாரம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தி தர அரசு முன் வர வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில், புதிய திட்ட பணிகளை துவக்க முடியாது. அடுத்ததாக ஆட்சிக்கு வரும் அரசு அமையும் வரையில் பல்வேறு வசதிகளுக்கு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். முதலில் குடிநீர் மற்றும் தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, காஞ்சி புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கட்டி முடிக்கப்பட்ட கலைஞர் கனவு இல்லம் குடியிருப்புகளுக்கு, அந்தந்த ஊராட்சிகளில் நிதி இருந்தால் குடிநீர், தெரு விளக்கு, சாலை ஆகிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நிதி இல்லாத பட்சத்தில், கலெக்டரிடம் கூறி, கனிம வள நிதி ஒதுக்கீடு பெற்று வசதிகளை பூர்த்தி செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ