உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோர்ட்டில் கைதான டி.எஸ்.பி. சிறை வாசலில் தப்பி ஓட்டம் சினிமாவை மிஞ்சும் சம்பவம்

கோர்ட்டில் கைதான டி.எஸ்.பி. சிறை வாசலில் தப்பி ஓட்டம் சினிமாவை மிஞ்சும் சம்பவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பூசிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருக்கும் அப்பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையினருக்கும் இடையே சில நாட்கள் முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த அடிதடி சம்பவம் குறித்து முருகன், காஞ்சிபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். ஒரு மாதம் ஆகியும் போலீஸ் தரப்பிலிருந்து நடவடிக்கை எடுக்கவில்லை, எதிர் தரப்பில் ஒருவர் போலீஸ் துறையை சேர்ந்தவர் என்பதால் போலீசார் ஒருசார்பாக செயல்படுகின்றனர். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை இல்லை என முருகன் காஞ்சிபுரம் கோர்ட்டில் மனு செய்தார். இந்த வழக்கு நீதிபதி செம்மல் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த டி.எஸ்.பி. சங்கர் கணேஷும் ஆஜராகி இருந்தார். முருகன் மற்றும் அவருடன் இருந்த 5 பேரை தாக்கியதாக கூறப்பட்டது. புகாரின் தீவிரத்தன்மை குறித்தும், ஒரு மாதமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்தும் நீதிபதி கவலை தெரிவித்தார். சம்பவத்தில் தொடர்புடைய லோகேஷ் என்பவரை நேற்று மாலைக்குள் கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. இதனால் கோபமடைந்த நீதிபதி குற்றாவளிக்கு உடந்தையாக இருப்பதாக கூறி காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை கைது செய்ய உத்தரவிட்டார். செப்டம்பர் 22 வரை நீதிமன்ற காவலில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டது. கோர்ட் வளாகத்தில் சீருடையில் இருந்த டி.எஸ்.பி. சங்கர் கணேஷை போலீசார் கைது செய்தனர். அவரை சிறையில் அடைக்க அழைத்து சென்ற போது அவர் தப்பி ஓடி வேறொரு காரில் ஏறி மாயமானார். போலீசார் சிலர் உதவியுடன் அவர் தப்பி சென்றதாக கூறப்பட்டது. பின் 20 நிமிடங்கள் கழித்து அவர் அதே காரில் மீண்டும் சிறைக்கு வந்தார். பரபரப்பான சூழலில் அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். நீதிபதி செம்மல்லின், பி.எஸ்.ஓ., எனும் தனிப்பட்ட பாதுகாப்பு போலீஸ்காரராக லோகேஷ், சில மாதங்களுக்கு முன் பணிபுரிந்தார். திடீரென அவர், செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ