காலி மதுபாட்டில் பெறும் திட்டம் காஞ்சியில் இன்று முதல் அமல்
காஞ்சிபுரம்:காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம், இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளது என, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் நிறுவனத்தில், காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு, பொது இடங்களில் மது பாட்டில்களை வீசி செல்லாமல், டாஸ்மாக் கடையில் கொடுத்து 10 ரூபாய் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மதுபானங்கள் வாங்கும் போது, 10 ரூபாய் கூடுதலாக கொடுத்து மதுபாட்டில் வாங்கி செல்லலாம். காலி பாட்டில்களை டாஸ்மாக் கடையில் கொடுத்து, 10 ரூபாயை வாடிக்கையாளர் திரும்ப பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.