சுகாதார நிலையம் இடித்து அகற்ற எதிர்பார்ப்பு
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் அருணாச்சல பிள்ளைச்சத்திரம் பகுதியில், துணை சுகாதார நிலையம் இயங்கி வந்தது. இந்த மையத்தில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் மருத்துவ சேவை பெற்று வந்தனர். கடந்தாண்டு துணை சுகாதார நிலைய கட்டடம் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. மேலும், மழையின் போது சிமென்ட் கூரையிலிருந்து மழைநீர் கசிந்தது. இதனால், நோயாளிகள் படுக்கை, மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆவண புத்தகங்கள் நனைந்து வீணாகின.இதன் காரணமாக, துணை சுகாதார நிலையம், தற்காலிகமாக வேறொரு இடத்தில், வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. எனவே, சேதமடைந்த அரசு ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டடத்தை அகற்றி, புதிதாக கட்ட வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து வட்டார சுகாதார அலுவலர் கண்ணதாசன் கூறியதாவது:அருணாச்சல பிள்ளைச்சத்திரம் பகுதியில் இருந்த துணை சுகாதார கட்டடம், சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சேதமடைந்த கட்டடத்தை அகற்ற வேண்டும் என, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் புதிய கட்டடம் கட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.