உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  மின்மாற்றி திருட்டால் மோட்டார்கள் இயக்க முடியவில்லை: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்

 மின்மாற்றி திருட்டால் மோட்டார்கள் இயக்க முடியவில்லை: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்

காஞ்சிபுரம்: கிராமங்களில், மின்மாற்றி திருட்டால், மின் மோட்டார்கள் இயக்க முடியவில்லை என, வேளாண் குறைதீர் கூட்டத்தில், விவசாயிகளிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கத்தில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, மாவட்ட வருவா ய் அலுவலர் முருகேசன், காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் யோகவிஷ்ணு ஆகியோர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று விவசாயிகளுக்கு பவர் டில்லர், ஆறு பேருக்கு உளுந்து உள்ளிட்ட இடு பொருட்கள், 10 பேருக்கு கூட்டுறவு சங்க பயிர் கடன், காட்டு பன்றி தாக்கி பயிர் சேதம் ஏற்பட்ட ஐந்து விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை என, மொத்தம் 24 விவசாயிகளுக்கு நலத் திட்டங்களை வழங்கினார். அதன் பிறகு நடந்த விவாதம்: பெருமாள், விவசாயி, உத்திரமேரூர்: பன்றிகள் தாக்கிய நெல் பயிருக்கும், கரும்புக்கும் ஒரே இழப்பீடு வழங்குவது சரியில்லை. நெல் மூன்று மாத பயிர், கரும்பு ஒரு ஆண்டு பயிர் எப்படி இழப்பீடு சரியாக இருக்கும். ரவி மீனா, மாவட்ட வன அலுவலர்: சேதம் ஏற்பட்ட பரப்பு குறித்த தகவலை சரியாக, மனுவாக அளியுங்கள். இழப்பீடு வழங்க பரிந்துரை செய்யப்படும். பெருமாள், விவசாயி, உத்திரமேரூர்: ஒழையூர் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன. கால்நடை மருத்துவரை அழைத்தால், அவர் கட்டிங் கேட்கிறார். மைதீன் பார்த்திமா, கால்நடை துறை இணை இயக்குநர்: அந் த கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர், ஒரு மாதமாக எந்த கால்நடை இறப்பும் நிகழவில்லை என, சான்று அளித்துள்ளார். பணம் கேட்டார் என்பது வெறும் குற்றச்சாட்டு தான். மாசிலாமணி, விவசாயி, உத்திரமேரூர்: மாடுகள் இறந்தது உண்மை தான். வருவாய் துறை அதிகாரிகள் ஒரு முறை ஆய்வு செய்து உண்மை நிலவரம் அறிய குழு அமைக்க வேண்டும். கலெக்டர் கலைச்செல்வி: இந்த புகார் மீது முறையாக விசாரணை நடத்தப்படும். மாசிலாமணி, விவசாயி, உத்திரமேரூர்: நடப்பாண்டு மழை பொழிவு குறைவுதான். நவரை பருவத்திற்கே பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். இதில் வேறு, ஏரிகளில் மீன் வளர்க்கிறேன் என, சாணக்கழிவு, இறைச்சிக் கழிவுகளை கொட்டி ஏரிகள் நாசப்படுத்தப்படுகிறது. இதை தடுக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் அரசிடம் விதை தட்டுப்பாடு நிலவுகிறது. அதை சரி செய்ய வேண்டும். பரசுராமன், விவசாயி, கோவிந்தவாடி: சென்னை - -பெங்களூரு அதிவிரைவு சாலைக்கு கொட்டிய மண், அரிப்பு ஏற்பட்டு, விளை நிலங்களில் மண் குவிந்துள்ளது. இதனால், விவசாயம் செய்ய முடியுவில்லை. அதே திட்ட பணிக்கு, மின் இணைப் பு மாற்றம் செய்தத்திற்கு இழப்பீடு வழங்கவில்லை. கலெக்டர் கலைச்செல்வி: சம்மந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து, விவசாயிகளின் குறைகளை சரி செய்யுங்கள். பரசுராமன், விவசாயி: கிராமங்களில், மின் மாற்றிகள் திருடு போகின்றன. இதனால், விவசாயத்திற்கு செல்லும் மின் மோட்டார்கள் இயக்க முடியவில்லை. இளையராஜா, உதவிக்கோட்ட பொறியாளர்: அங்கு மட்டும் மின் மாற்றி திருடு போகவில்லை. 25க்கும் மேற்பட்ட இடங்களில் திருடு போய் உள்ளது. கலெக்டர் கலைச்செல்வி: மாவட்ட கண்காணிப்பாளரிடம் முறையாக புகார் அளியுங்கள் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். அழகேசன், விவசாயி, கொட்டவாக்கம்: கொட்டவாக்கம் ஏரி நீர்வரத்து கால்வாய், 20 அகலம் பரப்பளவு உடையது. அதிவிரைவு சாலை போடும் பணிக்கு கால்வாய் சுருக்கி கட்டுகின்றனர். இதனால், நீர் வரத்து குறையும். கலெக்டர் கலைச்செல்வி: நேரில் சென்று ஆய்வு செய்துவிட்டு, பழையபடி கால்வாய் கட்டித்தர நடவடிக்கை எடுங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி