ஏரியை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
உத்திரமேரூர்:-களியாம்பூண்டி ஏரியை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், களியாம்பூண்டி கிராமத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, 150 ஏக்கர் பரப்பளவிலான ஏரி உள்ளது. பருவமழை நேரங்களில் ஏரியில் நிரம்பும் தண்ணீரை கொண்டு 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், ஏரி முறையாக துார்வாரப்படாமல் நீர்பிடிப்பு பகுதி மண்ணால் துார்ந்து உள்ளது. செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால், மழை நேரங்களில் தேவையான தண்ணீர் சேகரமாகாமல் உபரிநீர் விரைவாக வெளியேறுகிறது. மேலும், ஏரியில் குறைவான அளவு தண்ணீர் சேகரமாவதால், விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. எனவே, பருவமழை துவங்குவதற்கு முன் ஏரியை துார்வாரி சீரமைக்க, பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உ ள்ளனர்.